பூசாரி கொலை வழக்கு விசாரணையில் காணாமல் போன இளைஞன் பிணமாகக் கண்டுபிடிப்பு.!

0 1

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. இங்கு, கடந்த மாதம் கொள்ளையர்கள் புகுந்து பூதநாராயணன் கோயில் பூசாரியைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. யார் கொலை செய்தது? எதற்காகக் கொலை நடந்தது எனக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர் இவ்வழக்கை  விசாரித்துவந்த இராயப்பன்பட்டி போலீஸார். இந்நிலையில், பூசாரி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையின் போது, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் தொடர்பான துப்பு கிடைத்தது போலீஸாரை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கம்பம் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி. அக்கிராமத்தின் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யத்தேவரின் மகன் மனோஜ்குமார் (வயது23) கடந்த 2018 ஜனவரி 13ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என அவரது தாயார், கூடலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ள நிலையில், சுருளி அருவியில் கொலை செய்யப்பட்ட பூசாரி வழக்கை விசாரித்துவந்த போலீஸார்,கருநாக்கமுத்தன்பட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (வயது 24), மற்றும் கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபிமன்னன் மகன் பிரவின்குமார் (வயது 23) ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இருவரையும் தீர விசாரித்ததில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மனோஜ்குமாரை, இருவரும் சேர்ந்து கொலை செய்து, கருநாகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் புதைத்ததாக தெரிவித்தனர்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இருவரையும் அழைத்துக்கொண்டு மனோஜ்குமார் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்தனர். பின்னர், உத்தமபாளையம் வட்டாட்சியர் முன்னிலையில், புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் தனது நண்பனையே கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. பூசாரி கொலைவழக்கில் கிடைத்த தகவலால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.