‘‘பத்திரிகைகளிடம் எதையுமே சொல்லாதீங்க!’’-அ.தி.மு.க-வினருக்கு தலைமையின் கட்டளை

0 4

அப்படியே அச்சு அசலாய்ப் பொருந்திப்போகிறது வடிவேலுவின் அந்தக் காமெடி காட்சி. எதையுமே சொல்லாமல், ‘‘போலீஸ்காரங்க கேட்டா எதையும் சொல்லிராதீங்க, அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க!’’ என்று போண்டா மணி சொல்லிவிட்டு எஸ்கேப் ஆவதைப் போல, அ.தி.மு.க கூட்டத்தில் எந்த முடிவையுமே எடுக்காமல், பத்திரிகைகளிடம் எதையுமே சொல்லாதீங்க” என்று கட்டளை போட்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை.‘‘அ.தி.மு.க-விற்கு ஒற்றைத்தலைமை வேண்டும்!’’ என்று ராஜன் செல்லப்பா கொளுத்திப்போட்ட விவகாரத்தை, ஊடகங்களும் ஊதிவிட பெரிதாகப் பற்றி எரிந்தது. குன்னம் ராஜேந்திரன், சி.வி.சண்முகம், செல்லபாண்டியன் என வரிசையாகப் பலரும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்ததைத் தவறு என விமர்சித்தனர். இதையெல்லாம் பார்த்துவிட்டு, இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒரே ஒரு ஆள் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தால், தீப்பொறி போல மோதல் பற்றிக்கொள்ளுமென்று எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் பலமாக இருந்தது.சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில், இன்று (ஜூன் 12) காலை பத்தே முக்கால் மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம், திட்டமிட்டபடி 12 மணிக்குள் முடிக்கப்பட்டது. உப்புச்சப்பில்லாத ஐந்து தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. ஏதாவது சூடாகத் தகவல் கிடைக்குமென்று நினைத்த பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வழக்கமாக, உள்ளே நடக்கும் விவகாரம் பற்றி எதையாவது தகவலாகச் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமாரும், விட்டால் போதுமென்று கிளம்பிவிட்டார். மீடியாக்கள் விடாமல் துரத்த, வேறுவழியின்றி ஓரிரு வார்த்தைகள் உதிர்த்துவிட்டுக் கிளம்பினார்.தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகை பேட்டிகள் என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பேசிவந்தனர். அதற்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது. செய்தித் தொடர்பாளர் இல்லாதவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தால், கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்’ என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இவர்களைத் தாண்டி வேறுயாரும் பேசவே இல்லை. மிக முக்கியமான ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் குறித்து ஒருவார்த்தைக்கூட எழுப்பவில்லை. வடிவேலுவின் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்…’ காமெடியாக,  ‘அம்மா ஆட்சி தொடரும்’ என ஒற்றை வார்த்தையில் கூட்டத்தை ஏறக்கட்டிவிட்டனர்.  கூட்டத்தில் எதையுமே விவாதிக்காமல், எதையும்  வெளியே சொல்லவேண்டாம்ங்கறீங்க?” என ஒரு மூத்த நிர்வாகி புலம்பியபடி வெளியேறியதுதான் காமெடி. 

Leave A Reply

Your email address will not be published.