`இனியும் தாமதிக்கக் கூடாது’ – கஜா பாதிப்பை மீட்டெடுக்க முனைப்பு காட்டும் புதுக்கோட்டை இளைஞர்கள்

0 28

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி என்ற ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, வன்னியன்விடுதி இளைஞர்கள், மாதுளை உள்ளிட்ட 5 வகையான மரக்கன்றுகளைத் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஈவு இறக்கமே இல்லாமல், சிதைத்துப் போட்டுவிட்டுச் சென்றது கஜா புயல். மரங்களையும் விட்டு வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மரங்கள் கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சூழ பசுமை போர்த்தியபடி காட்சியளித்த மாவட்டத்தின் பல பகுதிகள் இன்று மரங்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்த நிலையில்தான், தற்போது மரம் நடுவதன் அவசியம் குறித்து இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் தற்போது, புதுக்கோட்டையை பழையபடி மரங்கள் சூழ்ந்த மாவட்டமாக மாற்றும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். வன்னியன் விடுதி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின்போது, இளைஞர்கள் வானவேடிக்கை முழங்கக் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால், இந்த வருடம் கலை நிகழ்ச்சிகளுக்குச் செலவு செய்யும் பணத்தை சேமித்து, அதற்குப் பதிலாக தேர்த்திருவிழாவைப் பார்க்க வந்த பக்தர்களுக்கு 5 வகையான மரக்கன்றுகளை வழங்கி மக்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்கினர்.சூப்பர் கிங்க்ஸ் பாய்ஸ் அணியைச் சேர்ந்த பாண்டிதுரை கூறும்போது, “ஆண்டாண்டு காலமாக அசைக்க முடியாத மரங்களை எல்லாம், கஜா புயல் தூக்கி அடிச்சிட்டு போயிருச்சு. புயலுக்கு முன்னால எங்க ஊர்ல ஆயிரக்கணக்கில் மரங்கள் இருந்துச்சு. இப்போ, நிழலுக்குக் கூட ஒரு மரம் இல்லை. எங்க மாவட்டத்தை மரங்கள் சூழ்ந்த பகுதியாக பழைய நிலைக்கு எப்படியாவது கொண்டு வரணும், என்று யோசித்தோம். இப்போ, மரங்கன்று நட்டாலும், அது பூத்துக்குலுங்க எப்படியும் அஞ்சு அல்லது பத்து வருஷம் ஆகும். இனியும் தாமதிக்கக் கூடாது’ன்னுதான் உடனே, அரிமளம் கல்லுக்குடியிருப்புக்குப் போய் பலா, கொய்யா, புங்கன், மாதுளை என 5 வகையான மரக்கன்றுகளை மொத்தமாக வாங்கி வந்தோம். அவற்றை திருவிழா பார்க்க வந்தவங்களுக்கு இலவசமாக கொடுத்தோம். எல்லாரும் மகிழ்ச்சியோட மரக்கன்றுகளை வாங்கிக்கிட்டு போனாங்க. மரங்கன்றுகளை நட்டு வைத்து பாராமரிக்கணும்”ன்னு அவங்ககிட்ட வலியுறுத்துனோம். ஊருக்காக எத்தனையோ நிகழ்ச்சிகளை செஞ்சிருக்கோம். அதுல எல்லாம் கிடைக்காத மன நிறைவு, மரக்கன்றுகள் கொடுத்ததில் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.ஏற்கெனவே, வன்னியன் விடுதியைச் சேர்ந்த மாமரத்தடி நண்பர்கள், அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அவர்களை ஆச்சர்யப்படுத்தினர். இந்த நிலையில்தான் தற்போது, சூப்பர் கிங்க்ஸ் பாய்ஸ் அணியினர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அசத்தி இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் சொந்தச் செலவில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீர் நிலைகளைத் தூர் வாரி அசத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது. 

Leave A Reply

Your email address will not be published.