தடைக்காலம் முடியும் முன்பே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்!

0 7

60 நாள்கள் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீன்பிடி அனுமதி இன்றி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் 60 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கன்னியாகுமரி நீரோடிப் பகுதி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி வரையிலான கடலோரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதை நம்பியிருந்த மீன்பிடி கூலித் தொழிலாளிகள் மாற்றுத் தொழிலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக அமல்படுத்தப்பட்டிருந்த தடைக்காலம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் சனிக்கிழமை முதல் மீன் பிடிக்கச் செல்ல மீன்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (வெள்ளி) மதியமே மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுவிட்டனர். இதை அறிந்த பாக்நீரிணை பகுதியில் உள்ள மற்ற பகுதி மீனவர்களும் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கிளம்பிச் சென்றனர்.ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பழுது பார்க்கப்பட்டு மீன்பிடி சாதனங்கள், ஐஸ் கட்டிகள் ஆகியன ஏற்றி வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு பெற இருந்த நிலையில் மாலை 5 மணிக்கே மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லத் தொடங்கினர். மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் துறையினரால் மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்குவது வழக்கம். ஆனால். தடைக்காலம் முடிவடைய சுமார் 7 மணிநேரம் இருந்த நிலையில் இந்த அனுமதி டோக்கனை பெறாமலே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகம் வெள்ளிக்கிழமை  மாலையிலேயே படகுகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Leave A Reply

Your email address will not be published.