`யாரும் வாய்திறக்கக் கூடாது; அ.தி.மு.க-வில் வாய்ப்பூட்டுச் சட்டம்!’ – துரைமுருகன் கிண்டல்

0 7

`ஊடகங்களிடம் தலைமையைப் பற்றி யாரும் வாய்திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டுள்ளதாக’ தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அ.தி.மு.க-வை கடுமையாகச் சாடியுள்ளார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவிவருகிறது. பாலாற்றில் இருக்கும் மணலைச் சுரண்டி எடுத்துவிட்டார்கள். இன்றைக்கும் திருட்டுத்தனமாக மணல் எடுக்கிறார்கள். கலெக்டரை கேட்டால், நாங்கள் மணல் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை என்கிறார். காவல்துறைதான் மணல் எடுப்பதற்கு மறைமுகமாக அனுமதி கொடுக்கிறது. தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை வைத்து கலெக்டர் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்திருக்கவேண்டும். கலெக்டர் அப்படிச் செய்யாதது, வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பணம் இருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்துப் போர் போடுவது, வேறு உபகரணங்களை வாங்குவது எனத் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்திருக்கவேண்டும். இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?. பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த மனுக்கள் வாரக்கணக்கில் தூங்குகிறது. போர்க்காலத்தைவிட அதிகமான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே நிலை நீடித்தால் உள்நாட்டு யுத்தம் என்பதைப் போல மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால் பசியைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். தாகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது. `நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். அந்த நீரில்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள்.தலைமையில் ஒத்தையா, இரட்டையா என்று பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, இதுவெல்லாம் தெரியாது. நாங்கள் புள்ளி விவரத்தோடு தண்ணீர்ப் பிரச்னையை கலெக்டரிடம் சொல்லியிருக்கிறோம். தலைமையைப் பற்றி ஊடகங்களிடம் அமைச்சர்களோ, மற்றவர்களோ எந்தக் கருத்தையும் சொல்லக் கூடாது என்று அ.தி.மு.க உத்தரவிட்டிருப்பதைப் பார்க்கும்போது, அ.தி.மு.க-வில் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.