தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க ஆய்வுப் பணிகள் துவக்கம்..!

0 38

தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய மரபுசாரா எரிசக்தி துறை பொறியாளர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் பிரதான துறைமுக நகரமாக விளங்கி வந்த தனுஷ்கோடி 1964-ல் ஏற்பட்ட புயலில் உருக்குலைந்து போனது. இதன் பின் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடியில் மீனவர்கள் தங்கள் தொழிலுக்காக அடிப்படை வசதிகள் இன்றி குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். புயலின் அழிவில் சிக்கி எஞ்சி நிற்கும் கட்டிட இடிபாடுகளை தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு வருகின்றனர். இந்நிலையில் ரூ.55 கோடி செலவில் தனுஷ்கோடிக்கு மத்திய அரசு சாலை அமைத்தது. இதனை கடந்த ஆண்டு ஜுலை 27-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் கான்கிரீட் தூண்கள் அமைத்து அதில் காற்றாலைகள் அமைக்க திட்டமிட உள்ளதாக கடந்த 18-ம் தேதி தனுஷ்கோடி வந்திருந்த மத்திய மரபுசாரா எரிசக்தி துறை இணை செயலாளர் பானுபிரதாப் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த காற்றாலை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மரபுசாரா எரிசக்தி துறையினை சேர்ந்த பொறியாளர்கள் ‘லைடர்’ என்ற கருவியின் மூலம் தினந்தோறும் வீசும் காற்றின் அளவினை கணக்கிடும் பணியை இன்று துவங்கினர். இந்த ஆய்வு பணி தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வின் முடிவினை தொடர்ந்து அமைக்கப்படும் காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரம் ராமேஸ்வரம் மட்டுமல்லாது மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.