‘நாங்க பேசி கொண்டிருக்கும் போதே எட்டி உதைச்சுட்டார்’ – மின் கோபுரம் அமைத்ததை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்!

0 30

பவர் கிரிட் நிறுவனம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் நங்கவள்ளி அருகே மலையடிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அத்துமீறி மின் கோபுரம் அமைக்க பவர் கிரிட் அதிகாரிகள் முயற்சி செய்ததை அடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறை முன்னிலையில் பவர் கிரிட் நிறுவனத்தின் அதிகாரி ஜெயக்குமார் என்பவர் சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராஜாத்தியை எட்டி உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அவர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டார்கள். காவல்துறையினர் அவர்களை கைது செய்து நங்கவள்ளியில் உள்ள ரங்கன்னா மண்டபத்திற்கு அழைத்து சென்றார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுப்பற்றி அப்பகுதியை சேர்ந்த விஜயா என்ற விவசாயி, ” சார் நாங்க இந்த ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் நிலத்தை நம்பி வாழ்ந்துட்டு இருக்கிறோம். எங்க நிலத்தில் எங்களிடம் கேட்காமல் டவர் போடுவதாக சொல்லி காட்டுக்குள்ள வேலை செய்கிறார்கள். இந்த நிலம் பறிபோய் விட்டால் நாங்கள் எதை நம்பி வாழ்வோம். போலீஸ்காரர்கள் பக்கத்தில் இருக்கும் போது முறையாக கேட்டுக் கொண்டிருந்தோம். நாங்க பேசி கொண்டிருக்கும் போதே அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி தோழர் ராஜாத்தியை எட்டி உதைத்து விட்டார். காவல்துறை வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாம் எங்களை கைது செய்கிறார்கள்” என்றார்

தமிழக விவசாயிகளின் சட்ட ஆலோசகர் ஈஸ்வரன், ”இந்த உயர் அழுத்த மின்சாரம் புகளூர் டூ ராய்கார் வரை மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்லப்படுகிறது. இந்திய மின்சார சட்டம் 2003-ன் படி சம்மந்தப்பட்ட நில உரிமையாளர் ஆட்சேபணை தெரிவித்தால் மாவட்ட கலெக்டரை அணுகி முறையிட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெற்று மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த சட்டங்களை பின்பற்றாமல் விவசாயிகளை மிரட்டி சொற்ப இழப்பீட்டு தொகை கொடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மொத்தத்தில் தமிழக விவசாயிகளை அழித்து விடுவார்கள்” என்றார். இதுப்பற்றி பவர் கீரிட் நிறுவனத்தின் அதிகாரி ஜெயக்குமாரிடம் பேச முற்பட்டோம். ஆனால் அவர் பேச மறுத்து விட்டார்.

Leave A Reply

Your email address will not be published.