`ஓ.பி.எஸ் மகன் பேசுவது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம்!’ – கொதிக்கும் முத்தரசன்

0 36

 “தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை என ஓ.பி.எஸ் மகன் மக்களவையில் பேசுவது என்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.ஏ.ஐ.டி.யு.சி விருதுநகர் முன்னாள் மாவட்டத் தலைவராக இருந்த ராமசாமியின் படத்திறப்பு விழா ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் படத்தைத் திறந்து வைத்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பா.ஜ.க-வுக்கு எதிராக இந்தியாவில் 67 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர் என்பதை மத்தியில் இருக்கும் மோடி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கல்வித் திட்டம் என்பது மாணவர்களை அவர்களின்  குலத்தொழிலைச் செய்ய வைக்கும் நோக்கத்தில் செயல்படுவதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால், இதைப்பற்றிப் பேசக்கூடிய மாநில அரசோ மௌனமாக உள்ளது.தமிழக அரசியல்வாதிகளை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் பேசியது குறித்து தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் கருத்தை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க சார்பில் மக்களவைக்குச் சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத் குமார், தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை என மக்களவையில் பேசியுள்ளார். இது ஒரு மாநிலத்துக்குச் செய்யும் துரோகம். இவரைத் தேர்ந்தெடுத்த தேனி மக்களே இதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்” எனத் தெரிவித்தார். 

Leave A Reply

Your email address will not be published.