`ரூ.50 லட்சம் கொடு; உன்னைக் கொன்னுட்டு ரூ.10 லட்சம் தர்றேன்’- சென்னை தொழிலதிபரை மிரட்டிய ரவுடி 

0 20

சென்னை தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி இம்ரான் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  சென்னை  ராயப்பேட்டை, பாலாஜி நகர், ஸ்ரீபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் மக்பூல் பாஷா. தொழிலதிபரான இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “கடந்த 1-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர், 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இரண்டு நாள்களுக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், என்னை என் தம்பியை அல்லது என் குடும்பத்தினரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அதற்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார். போலீஸுக்கு சென்றால் தனக்கு பயமில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தொழிலதிபர் மக்பூல் பாஷாவிடம் பேசினோம். “என் குடும்பத்தினர் குறித்த விவரங்களும், என் தொழில்கள் குறித்த தகவல்களும் என்னை மிரட்டிய ரவுடி இம்ரானுக்கு முழுமையாகத் தெரிகிறது. இம்ரான் என்னிடம் பேசும்போது, காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவரை முதலில் மிரட்டினேன். அதன்பிறகு அவரைக்  கொலைசெய்தேன். அதுபோலத்தான் உன்னையும் (மக்பூல் பாஷா) கொலை செய்வேன் என்று உருது மொழியில் பேசினார். மேலும், நான் பேசுவதை நீ ரெக்கார்டு செய்து போலீஸில் கூறினாலும் எனக்குப் பயமில்லை. ஏனெனில், நான் இதுவரை 10 பேரை கொலை செய்துவிட்டேன். 11-வது நபராக உன்னைக் கொலைசெய்ய உள்ளேன்” என்று கூறினார். இதையடுத்து, இம்ரான் மிரட்டியதற்கான ஆதாரங்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் குறித்து இணையதளத்தில் தேடியபோது, அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்று தெரியவந்தது. மேலும், அவருக்கு நான் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் என்னை அல்லது என் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்துவிட்டு  இம்ரான் கொடுக்கும் 10 லட்சம் ரூபாயில் இறுதி அஞ்சலியைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என் குடும்பத்தினர் வெளியில் எங்கும் செல்வதில்லை. ஸ்கூலுக்குச் செல்லும் குழந்தைகளைக் கடத்திவிடுவதாகவும் இம்ரான் மிரட்டினார். எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் போலீஸார் இம்ரானைக் கைதுசெய்து, என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றார். இந்தப் புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில், ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் மக்பூல் பாஷாவை மிரட்டிய ரவுடி இம்ரான் குறித்து போலீஸார் கூறுகையில், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் என்பவர் கொலை வழக்கில், இம்ரான் முக்கிய குற்றவாளி. கொலை நடந்த மறுநாள், அவர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இம்ரான் மீது ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆள்கடத்தல் அடிதடி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்,  இதேபோல  தொழிலதிபர் மக்பூல் பாஷாவை அவரின் கோழிக்கடை அலுவலகத்துக்குச் சென்று, கல்லாவில் இருந்த ரூ.6 லட்சத்தை மிரட்டி பறித்துச் சென்றுள்ளார். மீண்டும் மிரட்டி பணம் கேட்டபோது, ராயப்பேட்டை மக்பூல் பாஷா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, போலீஸார் இம்ரானைப் பிடிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். தற்போது, அப்பாஸ் கொலை வழக்கில் சிறை சென்றவன், மக்பூல் பாஷாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்” என்றனர். 

Leave A Reply

Your email address will not be published.