குளியலறையில் பென் கேமரா; அதிர்ந்த பெண் அதிகாரி… சிக்கிய இணை இயக்குநர்

0 24

பெண் அதிகாரியை குளியலறையில் வீடியோ எடுத்தார் என்ற புகாரில் இந்து அறநிலையத் துறையின் மதுரை மண்டல இணை இயக்குநர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அறநிலையத்துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான மதுரை மண்டல இயக்குநரான பச்சையப்பன் பற்றி தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், இன்று பெண் அதிகாரியின் புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மீது கோயில் உண்டியல் எண்ணும்போது ரூபாய்த்தாளை எடுத்தார் என்று புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை எல்லீஸ் நகர் அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாடி கீழ் மட்ட அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவைத்து பரிசுகளை பெற்றார் என்ற புகார் எழுந்தது. சமீபத்தில் பணி நியமனங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றார் என்றும் புகார் கூறப்பட்டது. ஆனால், அறநிலையத்துறை அமைச்சரின் நட்பால் அனைத்துப் புகார்களையும் ஒன்றுமில்லாமல் செய்தார்.இந்த நிலையில்தான் சமீபத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சியில் பணி செய்ய திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த மண்டல இயக்குநர் பச்சையப்பன் பென் கேமராவால், அந்தப் பெண் அதிகாரி குளிப்பதை படம் எடுக்க செட் செய்து வைத்திருக்கிறார். மறுநாள் பென் கேமரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் அதிகாரி அதை எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனே மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் செய்ய, விரைவாக வழக்கு பதிவு செய்து பச்சையப்பனிடம் விசாரணை நடத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். அறநிலையத்துறையின் உயர் அதிகாரி, சக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.