`முற்றத்தில் தூங்கினர்; சடலமாகக் கிடந்தனர்!’- நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை

0 23

தூத்துக்குடியில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் , குளத்தூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர்  சோலைராஜ். இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அதே உப்பளத்தில் விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதியும் வேலை பார்த்து வந்துள்ளார்.  இருவரின் நட்பு காதலாக மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம்  தெரியவரவே, வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஜோதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூரில் வசித்து வந்தனர். நேற்று இரவு இருவரும் வீட்டின் முற்றத்தில் தூங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் சோலைராஜ் வீடு வெகுநேரமாக திறக்கவில்லை என்பதால், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். சோலைராஜ், ஜோதி இருவரும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து தம்பதி இருவர் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  உடலை எடுப்பதற்கு சோலைராஜ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.போலீஸார் சமதானப்படுத்தி இருவரது உடல்களை அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதியின் உறவினர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கத்தி, அரிவாள்களுடன் வந்த கும்பல் காதல் திருமணம் செய்த ஜோடியை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.