பாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு?

0 20

பாகன்களின் கட்டளைக்கு முழு ஒத்துழைப்புத் தராததால், சின்னதம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை தடாகம், ஆனைக்கட்டிப் பகுதிகளில் சுற்றித்திரிந்த சின்னதம்பி யானை, விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம், அதைப் பிடித்து வனத்துறையினர் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர். ஆனால், சில  நாள்களிலேயே சின்னதம்பி தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தது. சின்னதம்பியை அதன் வாழ்விடத்திலேயே மீண்டும் விட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இதனிடையே, சின்னதம்பியை பிடித்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சின்னதம்பி யானையை மீண்டும் மயக்க ஊசி போட்டுப் பிடித்து, வரகளியாறு பகுதியில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். மரக்கூண்டில் வைத்து சின்னதம்பி யானைக்குப் பாகன்கள் பயிற்சி அளித்துவந்தனர். இந்த நிலையில், 132 நாள்களுக்குப் பிறகு கடந்த வாரம் சின்னதம்பி யானையை வனத்துறையினர் கூண்டிலிருந்து வெளியில் விடுவித்தனர்.“சின்னதம்பி பாகன்களுக்கு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அதைக் கூண்டிலிருந்து விடுவித்துவிட்டோம். அது பாகன்களின் கண்காணிப்பில் உள்ளது. விரைவில், சின்னதம்பியை கோழிக்கமுதி யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்” என்று வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.இந்த நிலையில், கூண்டிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து சின்னதம்பி யானை பாகன்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், அவர்களை மிரட்டித் தாக்க வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீண்டும் கூண்டில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, “வரகளியாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கொசுவும் அதிகரித்துள்ளது. இதனால், சூட்டுக்காக சின்னதம்பியே கூண்டுக்குள் வந்து ஓய்வு எடுக்கிறது. ஒரு காட்டு யானையை, வளர்ப்பு யானையாக மாற்றுவது எளிதான காரியம் இல்லை. அதற்குத் தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்க வேண்டும். சின்னதம்பிக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டேதான் இருக்கிறோம். பயிற்சியின்போது, பாகன்கள் மற்றும் யானை இடையே பல விஷயங்கள் நடக்கும். அது சாதாரணமான ஒன்றுதான். பயிற்சி முடியும் வரை, கூண்டுக்குள் செல்வதும், வெளிவருவதும் மிகவும் இயல்பான விஷயம்” என்று விளக்கம் அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.