பூங்காவில் அத்துமீறுபவர்களைத் தடுக்க நாகர்கோவில் நகராட்சி புது யுக்தி!

0 26

பூங்காக்களில், இளசுகள் நெருக்கமாக இருந்து பிறரை முகம் சுளிக்கவைக்கும் செயலுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி வழிகாட்டுகிறது நாகர்கோவில் நகராட்சி.

கன்னியாகுமரி மாவட்டம், நகர்கோவில் நகரத்துக்கான ஒரே பொழுதுபோக்குப் பூங்கா, வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பூங்காவை அழகுபடுத்தும் விதமாக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் நகராட்சிப் பூங்காவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்ண நடைபாதைகள், சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு, ஆகாய விமானம் மாடல், பெரிய டைனோசர், ஊஞ்சல், தண்ணீர் வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவில், இளசுகள் அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவந்ததைத்தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பூங்காவுக்குச் செல்லும் பலர் முகம்சுளிக்கும் நிலை ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட ஒகி புயல் காரணமாக, பூங்கா சுவர் சற்று சேதமடைந்தன. இதையடுத்து, பூங்கா சுவரை சீரமைக்க நகராட்சி முடிவுசெய்தது. பூங்கா பகுதியைச் சுற்றி சுற்றுச்சுவர் மறைவை ஏற்படுத்துவதால், சிலர் தனிமையில் அத்துமீறும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக, பூங்கா சுற்றுச்சுவருக்குப் பதில், கம்பிகளால் வேலி அமைக்கலாம் என நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் ஆலோசனை தெரிவித்தார். இதையடுத்து, பூங்காவின் அனைத்துச் சுவர்களையும் அகற்றிவிட்டு, கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கும் திட்டம் சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கம்பி வேலி அமைப்பதால், பூங்காவுக்கு வெளியே சாலையில் செல்பவர்களும் பூங்காவுக்குள் நடப்பதை முழுமையாகப் பார்க்க முடியும். இதனால், பூங்காவுக்குள் சென்று அத்துமீற நினைக்கும் ஜோடிகளுக்கு மறைவிடம் கிடைக்காது என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இப்போது, நாகர்கோவில் நகராட்சிப் பூங்காவைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இளசுகளின் எல்லை மீறலுக்கும் தீர்வு கிடைத்துவிட்டது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.