‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பா.ம.க போராட்டக்களத்தில் இறங்கும்!’ – ஜி.கே.மணி

0 24

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்று, இந்த ஆலையை மூடிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டால், ஆலைக்கு எதிராக பா.ம.க.வும் போராட்டக்களத்தில் இறங்கும்” என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த பா.ம.க தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மேற்பார்வை குழு அமைப்பதாகக் கூறிவருவது, தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதையே காட்டுகிறது. இது, வேதனை அளிக்கிறது. இதனால், காவிரி நம்மை விட்டுப் பறிபோகும் நிலை உள்ளது. இனியும் இதில் காலதாமதம் ஏற்பட்டால், நிச்சயமாக காவிரித்தண்ணீரைப் பெறமுடியாமல் போய்விடும். எனவே, தமிழக அரசு அனைத்துக்கட்சித் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று, தமிழர்களின் உணர்வுகளைப் புரியவைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை ஓயக்கூடாது.

தூத்துக்குடியில், மக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட, கடந்த பல வருடங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது, அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பால், இப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் இந்தப் போராட்டத்தை அரசு மதிப்பளிக்க வேண்டும். இப்பகுதி மக்களின் கோரிக்கையின்படியே தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆலையின் விரிவாக்கப்பணியைத் தடுத்து நிறுத்திடவும், ஏற்கெனவே செயல்பட்டுவரும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அரசின் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டால், ராமதாஸ் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகப் போராட்டக்களத்தில் இறங்குவோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.