“பிரதமர் பல கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறார்” – சேலம் விழாவில் முதல்வர் பேச்சு

0 24

சேலம் மக்களின் நீண்ட நாள் கனவான சேலம் விமான சேவை இன்று தொடங்கியது. அதற்காகச் சென்னையில் இருந்து ட்ரூஜெட் விமானத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வந்திருந்தார்கள். சேலத்தில் இருந்து முதல் விமான பயணத்தை தொடங்கியவர்களுக்கு முதல்வர் ரோஜா மலர் கொடுத்து அனுப்பி வைத்தார். ரூட்ஜெட் விமான நிறுவனம் இச்சேவையைத் தொடங்கி இருக்கிறது.

இந்த விழாவில் பேசிய ட்ரூஜெட் நிறுவனத்தின் செயலாளர் ராஜூ செளபே, ”இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் 205 நகரங்கள் விமான சேவை இணைப்பில் உள்ளது. அதாவது வருடம் ஒன்று, இரண்டு இணைப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த உதான் திட்டம் அறிமுகம் படுத்திய இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 52 புதிய விமான சேவை இணைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் சேலத்திற்கு விமான சேவை செய்ய இருக்கிறோம். பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ”சேலம் வரலாற்றில் இன்று பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இது 1993 -ல் தொடங்கப்பட்டாலும் தொடர முடியவில்லை. பாரத பிரதமர் நரேந்திர மோடி உதான் திட்டத்தின் மூலம் இந்த விமான நிலையத்தைப் புதுப்பொலிவோடு தொடங்கி இருக்கிறார். இந்த விமான பயணத்துக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. ஒரு தனி நபர் பயணம் செய்தால் 2500 ரூபாய் செலவு ஆகும். ஆனால் 50 சதவீதம் மானியத்தோடு 1500 ரூபாயில் சென்னை செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்” என்றார்.

இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”விமான பயணம் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. தற்போது குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களும் பயணம் செய்யலாம். மாநில அரசு எரிபொருள் ஒரு சதவீதம் குறைத்தும், பாதுகாப்பு இலவமாகவும், 20 சதவீத கடனும் கொடுத்திருக்கிறோம். இந்த விமான நிலையத்தால் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள். இங்குப் பெரிய ரக விமானங்கள் வந்து செல்லுவதற்கு விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளுவோம். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டதால் பாரத பிரதமரிடம் நாங்கள் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஆதரவற்ற இரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக விமான டிக்கெட் அளித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.