“இந்த ஆட்சியைக் கலைக்க யோசித்தோம். ஆனால்…!” – ரகசியம் உடைத்த துரைமுருகன்

0 21

“இந்த ஆட்சியை கவிழ்ப்பது அவ்வளவு கடினமென நினைக்காதீர்கள். அது ஒரு சின்ன வேலை தான்” என ஈரோட்டில் நடைபெற்றுவரும் தி.மு.க மண்டல மாநாட்டில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசினார்.

மாநாட்டின் முதல் நாளான மார்ச் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு துரைமுருகன் சிறப்புரையாற்றுவதாக பிளான். ஆனால், பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் ஆற்றிய சிறப்பு உரைகளால் ஏற்பட்ட தாமதத்தால் 25-ம் தேதி மதியம் 1 மணிக்கு துரைமுருகன் சிறப்புரையாற்றினார். துரைமுருகன் பேசுகையில், “தளபதியின் பேச்சு, அசைவு என ஒவ்வொன்றையும் நான் கவனித்து வருகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக மாநாடுக்கு இடையே சிறப்புத் தீர்மானத்தை இயற்றி செங்கோட்டையை அதிரவைத்திருக்கிறார் தளபதி. இதுதான் கலைஞர் பாணி. எதிரிக்கு நொடியில் பதிலடி கொடுக்கும் ராஜதந்திரத்தை கலைஞரைப் போல் தளபதியிடம் நான் பார்க்கிறேன்.

திராவிட இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்தது. அண்ணா மறைந்ததும் தி.மு.க அவ்வளவுதான் என்றனர். அந்த எண்ணத்தை கலைஞர் தவிடு பொடியாகினார். இப்போது கலைஞர் முன்போல் செயல்படமுடியாமல் ஓய்வில் இருக்கிறார். பேராசிரியராலும் பேச முடியவில்லை. இனி தி.மு.க அவ்வளவு தான் என பலர் பேசினார்கள். அதனால், கட்சியை என்னுடைய இரு தோளிலும் சுமப்பேன் என தளபதி களமிறங்கியிருக்கிறார். கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், எதிர்க் கட்சித் தலைவர் என பல பொறுப்புகளையும் தன்னுடைய தலையில் தாங்கி வருகிறார்.

இந்த ஆட்சியை கவிழ்ப்பதை அவ்வளவு கடினமென நினைக்காதீர்கள். அது ஒரு சின்ன வேலை. தலைவர் இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார் என பலர் சொல்லுகிறார்கள். ஆனால், கலைஞர் ஒருபோது எங்களிடம் பேசுகையில், ‘எனக்கு என்னமோ அந்த அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னு தோணுது. நாளைக்கு ஏதாச்சும் நடந்தா, கட்சி ரெண்டா உடையும். எங்களை ஆதரிங்கன்னு ரெண்டு குரூப்பும் நம்மகிட்ட ஆதரவு கேப்பாங்க. ஆனா, நாம யாரையும் ஆதரிக்கக் கூடாது. அப்படி நீங்க ஆதரிச்சா அதோட நாம தொலைஞ்சோம். அது அழிஞ்சி போற கட்சிக்கு உயிர் கொடுத்த மாதிரி ஆகிடும். என்னுடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென நீங்கள் எல்லாம் நினைக்கிறீர்கள். அவர் நேர்வழியில் தான் ஆட்சியமைக்க வேண்டும். மற்றபடி கொள்ளைப் புறமாக ஆட்சியமைக்கக் கூடாது’ என்று கண்டிப்புடன் சொன்னார்.

அதை நான் அதன்பின்னர் தளபதியிடம் தெரிவித்தேன். தலைவர் சொன்னாரே, அவர் பேச்சை மீறி எதையும் செஞ்சிடக் கூடாதுன்னு தான் இந்த ஆட்சியை விட்டு வச்சோம். அதனை ஏற்று இன்றைக்கு தளபதி சிறப்பாக கட்சியை வழிநடத்தி வருகிறார். தளபதி என்பதைத் தாண்டி அவர் செயல் தலைவராகிவிட்டார். இனிமேல் கட்சி நிர்வாகிகள் அடிக்கின்ற போஸ்டர்களில் தளபதி என்று போடாமல், செயல் தலைவர் என்று தான் போட வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.