விடுமுறையைப் பயன்படுத்தி சென்னை ஐ.ஓ.பி வங்கியின் லாக்கரை குறிவைத்த கொள்ளையர்கள்!

0 24

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு பிரதான சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி, இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது. வங்கியைத் திறந்தவுடன், அதிகாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விடுமுறையைப் பயன்படுத்தி வங்கி லாக்கரில் இருந்த 32 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. மேலும், லாக்கரில் இருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த அப்பகுதி போலீஸார், உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதன் முதல் கட்டமாக, அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுசெய்ய உள்ளனர், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கியின் அனைத்து ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் வங்கிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த வங்கியின் காவலாளியாகப் பணிபுரிபவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், தற்போது அங்கு இல்லை. காவலாளியிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் எப்போது நடைபெற்றது, எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்துக்கு வங்கி ஊழியர்கள் யாரேனும் உதவி செய்தார்களா, எந்த வழியாக அவர்கள் வங்கியினுள் நுழைந்தனர் என்ற அடிப்படையில், போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.