பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் டாஸ்மாக் பார்கள்! – அகற்றக் கோரி தேனி ஆட்சியரிடம் மனு

0 21

மக்கள் அதிகம் கூடும் பகுதியாக இருக்கும் தேனி பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பார்களை அகற்றக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேனி புதிய பேருந்து நிலையமான கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்துநிலையத்தைச் சுற்றிலும் 5 டாஸ்மாக் கடைகள் மட்டும் பார்கள் உள்ளன. லைசென்ஸ் இல்லாமல், சட்டவிரோதமான பார்களும் இதில் அடக்கம். பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் கல்வித்துறை அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. மாலை நேரத்தில், அரசு ஊழியர்கள் (பெண்கள் உட்பட) இந்த டாஸ்மாக் பார்களைக் கடந்துதான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். மாலை வேளைகளில் டாஸ்மாக் போதை ஆசாமிகள் அந்த வழியாகச் செல்பவர்களிடம் சில்மிஷம் செய்வதும், வழிப்பறியில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தகப் பிரிவு நிர்வாகிகள், தேனி கலெக்டரைச் சந்தித்து, பேருந்துநிலையத்தின் அருகில் செயல்படும் பார்களையும், டாஸ்மாக் கடைகளையும் அகற்றக் கோரி மனு அளித்தனர். ஒரே இடத்தில் இவ்வளவு பார்கள் இயங்குவதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள். `புதிதாக வந்திருக்கும் கலெக்டர் பல்லவி பல்தேவ், டாஸ்மாக் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மேலிடத்து அழுத்தத்தால் அமைதியாகிவிட்டார்’ என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.