மதுரை விமான நிலையத்தில் சிதறிக்கிடந்த தங்கக் கட்டிகள்! – அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள்

0 23

மதுரை விமான நிலைய நடைமேடையில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து தங்கக் கட்டிகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இதைக் கண்டுபிடித்த சுங்கத்துறையினர், கடத்தல்காரர்களைத் தேடி வருகிறார்கள்.

இலங்கையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து உஷாரான சுங்க புலனாய்வுத்துறையினர், வந்திறங்கிய பயணிகளைச் சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு, விமானத்தில் சோதனை செய்தும் எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில்தான், விமானத்திலிருந்து நிலையத்தை இணைக்கும் நடைமேடையில் ஐந்து தங்கக் கட்டிகள் சிதறிக்கிடந்ததைக் கண்டெடுத்தனர். இதன் மதிப்பு, 31 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

தங்க விமான நிலையம் என்று சொல்லுமளவுக்கு மதுரை விமான நிலையத்தில் தினம்தோறும் தங்கக் கடத்தலைக் கண்டுபிடித்து வருகிறார்கள். தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில், சமீப காலமாக மதுரையில்தான் அதிகமாக தங்கக் கடத்தல் நடைபெறுகிறது. அதிலும், கடத்தல்காரர்களின் டெக்னிக்குகளைப் பார்க்கும்போது, தனியாக புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு புதுப்புது முயற்சிகளை எடுத்து, கடைசியில் மாட்டிக்கொள்கிறார்கள்.

துபாய், சிங்கப்பூர், இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கிய பின், அதிகமான அளவில் தங்கக் கடத்தலும் நடைபெறுகிறது. ‘அயன்’ பட ஸ்டைலில் தங்கத்தை விழுங்கியும், பெல்ட், சூட்கேஸ் கைப்பிடி, ஷூ-க்குள் வைத்தும், இன்னும் சிலபேர் எலெக்ட்ரானிக் பொருள்களுக்குள் மறைத்தும், ஷேவிங் பிளேடு போல ஆக்கியும், வெள்ளை பெயின்ட் அடித்தும், பவுடராகவும் பல யுக்திகளைக் கையாண்டு, கடைசியில் சுங்கத்துறையினரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். தங்கம் கடத்துபவர்கள் அனைவரும் கூலிக்காகச் சென்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. கடத்தலுக்குக் காரணமான முக்கியப் புள்ளிகள் தப்பி விடுகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 10 கிலோ தங்கம் பிடிக்கப்பட்டுள்ளது. எவ்வளவுதான் பிடித்தாலும், கடத்தல்காரர்கள் மனம் தளராமல் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.