`15 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையம்!’ – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

0 26

“;தமிழகத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து சிறப்பு வசதிகளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைப்பதற்குத் தயாராகிவருகிறோம்”; என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை நகரில், முன்பு அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை வளாகத்தில், அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் கிளை, நேற்று (26.03.2018) தொடங்கப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், புற்றுநோய் விழிப்பு உணர்வு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதன்பிறகு, அனைவரும் புற்றுநோய்க்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஆரம்ப கால புற்று நோயைக் கண்டறியும் வாகனத்தைத் தொடங்கிவைத்தனர். ”இந்த வாகனம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, புற்று நோய்குறித்து விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதுதான் அந்தப் புற்றுநோய் ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டதன் நோக்கம்” என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் மேடையிலேயே அறிவித்தார்.

செய்தியாள்களிடம் பேசிய அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர், மருத்துவர் சாந்தா,”;புற்றுநோயைத் தடுக்க முடியும். புற்றுநோய் வருமுன் காப்பதே சிறந்தது. ஆரம்ப காலத்திலேயே புற்று நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை கொடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். வாய்ப் புற்று, மார்பகப் புற்று, கர்ப்பப்பை புற்று நோய் ஆகிய மூன்று வகையான புற்று நோய்களையும் குணப்படுத்த முடியும். வாய்ப் புற்று நோயைத் தடுக்க, புகையிலையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். புகையிலையை ஒழித்துவிட்டாலே 40 சதவிகித புற்று நோய்களைக் குறைக்க முடியும். கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பு மருந்து (வேக்சின்) மூலம் 100-க்கு 70 சதவிகிதம் தடுக்க முடியும். தடுப்பு மருந்து கொடுக்கும் பணியை, முதன்முதலில் அடையார் புற்றுநோய் மையம் ஆரம்பித்துள்ளது. இது, மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. இதற்கு, தமிழக அரசு முழு உதவி செய்ய வேண்டும். மார்பகப் புற்று நோய்யைக் கண்டிறிய மெமோகிராம் கருவி எங்களிடம் உள்ளது. இங்குள்ள மருத்துவமனையிலும் உள்ளது. இதைக்கொண்டு, கிராமம் கிராமமாகச் சென்று புற்று நோய் கண்டறியப்படும். இதைப் பயன்படுத்தி, புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நிச்சயமாக 80 சதவிகிதம் குணப்படுத்தமுடியும். இந்த வகையான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு குறைந்த செலவுதான் ஆகும். இதனால், இந்த சிகிச்சை முறைகளை ஏழை எளியவர்களும் செய்துகொள்ள முடியும். இதற்கு, தமிழக அரசு தொடர்ந்து நமக்கு அதிக வாய்ப்புகளையும், ஆதரவையும் அளித்துவருகிறது”; என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “;விழுப்புரம், திருவண்ணாமலையைத் தொடர்ந்து, பதுக்கோட்டையிலும் புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறியும் மையம் (ஸ்கிரினிங் சென்டர்), அரசின் ஒத்துழைப்போடு திறக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இந்த மையம் திறக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகிறதோ, அங்கும் அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, தமிழக அரசு அமைக்கும். மதுரை, திருநெல்வேலி, கோவை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் 15 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையம் நிறுவப்பட்டுவருகிறது. தமிழகத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து சிறப்பு வசதிகளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கத் தயாராகிவருகிறோம்”; என்றார்.

Leave A Reply

Your email address will not be published.