சரிந்த செல்வாக்கை நிமிர்த்த அமைச்சர் நடத்தும் மெகா ஜல்லிக்கட்டு! – இது விராலிமலை `விறுவிறு’ 

0 32

புதுக்கோட்டை மாவட்டத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் விராலிமலை ஜல்லிக்கட்டுப்போட்டியைப் பற்றிதான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வருகிற 29-ம் தேதி பிரமாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கிறது. அதற்கு தனியார் சேனல்களிலும் லோக்கல் டிவிகளிலும் விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இதில் வியப்புக்குரிய விசயம் என்னவென்றால், இந்த மாபெரும் ஜல்லிக்கட்டைக் காண்பதற்குத் திரண்டு வரும்படி `அன்புடன்’ அழைப்பதே மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு இணையாக நடத்துவதில் தனி அக்கறை செலுத்தி வருகிறார். அத்தனை தனியார் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து உதவிட வேண்டும் என்று அமைச்சரே கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கென்று கடந்த 25-ம்தேதி அன்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார்.

இதில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், திருச்சி ஐ.ஜி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அத்தனை பேர்களும் கலந்துகொண்டார்கள். ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு செய்வதற்கு கடைசி நாளான நேற்றைய நிலவரப்படி 2000 காளைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றன. பரிசுகளும் பிரமிக்க வைக்கும் வகையில் வரிசைக்கட்டி நிற்கின்றன. சிறந்த காளையாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதன் உரிமையாளருக்கு மாருதி காரும் சிறந்த மாடுபிடி வீரர்களாகத் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும் ஐந்து ஹீரோ ஹோண்டா பைக்கும் பரிசாகத் தரப்படயிருக்கின்றன. இதுதவிர, வழக்கம்போல் தரப்படுகிற தங்கநாணயம், கட்டில், பீரோ, சைக்கிள் போன்றவையும் உண்டு. இதுதவிர, விராலிமலை நகரெங்கும் விஜயபாஸ்கரை `தலைவா’ என்று மக்கள் ஆரவாரக்கூச்சலுடன் அழைப்பது போல் போஸ்டரும் ஃபிளெக்ஸ் போர்டுகளும் அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில் ஒட்டப்பட்டும் பொருத்தப்பட்டும் இருக்கின்றன. (இதுகுறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம்) புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி தொடங்கி, மாவட்டம் முழுக்க இதுவரை கிட்டத்தட்ட நூறு ஜல்லிக்கட்டுகள் நடந்து முடிந்திருக்கின்றன.

அத்துடன் வருகிற ஆவணி மாதம் வரை கோயில் திருவிழாக்கள் வரவிருப்பதால் அந்த மாத இறுதிவரை இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படி எந்த ஜல்லிக்கட்டுக்கும் காட்டாத அக்கறையை விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அமைச்சர் காட்டுவது ஏன்? இதற்கு மட்டும் `மாஸ்’ கூட்டுவது ஏன்? விசாரித்தபோது, “அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டு பிரியர். அவரது பண்ணைத்தோட்டத்தில் நான்கு காளைகளை வளர்க்கிறார். மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அது சிறிய அளவிலோ.. பெரிய அளவிலோ நடந்தாலும் அமைச்சர் தவறாமல் கலந்துகொள்வார். அவர்தான் பச்சை நிற கொடியசைத்து தொடங்கி வைப்பார்”; என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், உண்மை நிலவரமோ வேறு கலரில் இருக்கிறது. “இந்த பிரமாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டியை முழு செலவையும் ஏற்றுக்கொண்டு நடத்துவதே விஜயபாஸ்கர்தான்”; என்கிறார்கள். ஏன்? அதற்கொரு ஃப்ளாஷ் பேக் சொல்கிறார்கள் விராலிமலையைச்சேர்ந்தவர்கள். இந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றது.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு புரட்சிக்குப் பிறகு விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக வந்த விஜயபாஸ்கரை அன்றுள்ள அரசியல் சூழல் காரணமாக ஊர்மக்கள் 3,000 பேர் ஒன்று திரண்டு எதிர்த்தார்கள். “நாங்க செலவு பண்ணி நடத்துற ஜல்லிக்கட்டில் நீங்கள் பேர் வாங்கிட்டுப் போகலாமாணு பார்க்கறீங்களா?”; அன்றைக்கு அமைச்சரால் பதில் ஏதும் பேச முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அமைச்சருக்கு எதிர்ப்பாகச் செயல்படும் ர.ர.க்களும் இங்குதான் இருந்தார்கள். இப்போது அவர்களெல்லாம் டி.டி.வி.தினகரன் பக்கம் போய் விட்டார்கள். தனக்கான செல்வாக்கு விசயத்தில் சரிவைத் தந்த விராலிமலையில் அதனை சரிக்கட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கையில் எடுத்த விசயம்தான் இந்த ஜல்லிக்கட்டு. `தமிழ்நாடே திரும்பிப் பார்க்கிற மாதிரி விராலிமலை ஜல்லிக்கட்டை என் சொந்தச் செலவில் நடத்திக்காட்டுகிறேன்’ என்றாராம் அமைச்சர். கடந்தவருடம் சரிந்த தன்செல்வாக்கை இந்த வருடம் நிமிர்த்திக் காட்டத்தான் இந்தப் போட்டியையே நடத்துகிறார்”; என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.