மாலையுடன் சீர்வரிசை… அரசு ஆசிரியர்களின் ஆச்சர்ய மாணவர் சேர்க்கை

0 21

சீர் வரிசை கொடுத்து புதிய மாணவர்களை அழைத்துவரும் கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அரசிடம் மட்டுமே இருக்கவேண்டிய கல்வித்துறை, தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. விளைவு… கோடிகள் புரளும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக மாறிவிட்டது. புரியாத ஏதேதோ வார்த்தைகளைத் தங்களின் பள்ளிப் பெயர்ப்பலகையில் போட்டுக்கொள்ளும் தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர்களின் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தைக் குறிவைத்துச் சுரண்டிவருகின்றன. அதேசமயம், தனியார் கல்வி நிறுவனங்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியும் ஒரு காரணம் என்பதையும் மறுக்க முடியாது. கடமைக்காக மட்டுமே செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு மத்தியில், ஏழை மாணவர்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கும் சில அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியான ஒரு பள்ளிதான் கடலூர், முதுநகர் சுத்துக்குளம் அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளி.

கடந்த 5 வருடங்களுக்கு முன், சுமார் 300 மாணவர்கள் படித்த இந்தப் பள்ளியில், அரசின் நவீன (!?) கல்விக் கொள்கையாலும், தனியார் பள்ளிகளின் படையெடுப்பாலும், தற்போது 70 மாணவர்கள் மட்டுமே பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில், தலைமையாசிரியை உட்பட 7 ஆசிரியைகள் பணியாற்றிவருகின்றனர். இன்னும் இரண்டு மாதங்களில் 2018-2019 கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், அதிக அளவில் மாணவர்களை இந்தப் பள்ளிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள், தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமையிலான ஆசிரியர்கள். அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று அந்தப் பகுதி பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி, மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்திவருகின்றனர்.

அதேபோல, ஸ்கூல் பேக், ஷூ, சீருடை, நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருள்களைச் சீர் வரிசையாக எடுத்துச் சென்று பெற்றோர்களிடம் கொடுத்து, பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து, அந்த சீர் வரிசைப் பொருள்களைப் பெற்றோர்கன் ஆசியோடு மாணவர்களைப் பெறவைத்து, மாலை அணிவித்து, அவர்களை மேள தாளத்துடன் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக, ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு, மாணவன் ஒருவனுக்கு 2,000 ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் இந்த முயற்சியின் பலனாக, முதல்நாளே 25 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்திருக்கின்றனர். ஆக்டோபஸ் கரங்களுடன் மாணவர்களை வளைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் இப்படியான அரசுப் பள்ளிகள் பாராட்டப்படவேண்டியது மட்டுமல்ல, பாதுகாக்கப்படவேண்டியதும் கூட.

Leave A Reply

Your email address will not be published.