`கடைசி நேரத்தில் என்ன நடந்தது?’ – அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன் மனம்மாறிய பின்னணி

0 16

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி முத்துக்கருப்பன், அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக முத்துக்கருப்பன் எம்.பி., சில தினங்களுக்கு முன்பு அறிவித்து அரசியல் அரங்கில் பரபரப்பு ஊட்டினார். அதன்படி, இன்று காலை நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்ற அவர், இரண்டு பக்கங்களைக் கொண்ட கடிதத்தை செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.

அதன் பின்னர், அந்தக் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய நாயுடுவிடம் அளிக்கப் போவதாகத் தெரிவித்துச் சென்றார். ஆனால், அவர் அந்த முடிவைக் கைவிட்டுப் பின்வாங்கிவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள முத்துக்கருப்பன் எம்.பி தெரிவிக்கையில், ‘’காவிரி விவகாரம் தொடர்பாக எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக நான் அறிவித்தேன். அதற்காக மாநிலங்களவைத் தலைவரைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால் வெங்கைய நாயுடு, அலுவலகத்தில் இல்லாததால் அவரைச் சந்திக்க இயலவில்லை.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ’அண்ணே நீங்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது’ எனக் கேட்டுக்கொண்டார். அவரது கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது கடமை என்பதால், எனது ராஜினாமா முடிவைக் கைவிட்டிருக்கிறேன். அடுத்தகட்டமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசிய பின்னர், எனது முடிவை அறிவிப்பேன்’ என்றார்.

நாடாளுமன்ற மரபுப்படி ராஜினாமா கடிதத்தில், ‘ராஜினாமா செய்கிறேன்’ எனக் குறிப்பிட வேண்டுமே தவிர, காரணங்களைத் தெரிவிக்கக் கூடாது என உள்ள நிலையில், முத்துக்கருப்பன், தனது கடிதத்தில் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். அதனால், அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படும் எனப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்காத விவகாரம் தெரியவந்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.