`முதல்வர் சொகுசாக வந்துசெல்ல எங்கள் நிலத்தைப் பறிகொடுக்க முடியாது!’ – கொதிக்கும் சேலம் மக்கள்

0 17

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செயல்படாமல் இருந்த காமலாபுரம் விமான நிலையத்தைப் புதுப்பித்து ட்ரூஜெட் விமான சேவையைத் தொடங்கி வைத்தார். இது சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு என்று பெருமை அடைந்தார். ஆனால், இந்த விமான நிலையத்தை எதிர்த்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

சேலம் விமான நிலையம் தொடர்பாக அவர்கள், `1. சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்புடைய ஆவணங்கள், கோப்புகள் ஆய்வுசெய்ய சரியான நேரத்தை ஒதுக்குமாறு வேண்டுகிறோம்.

2. 1989-ம் ஆண்டு தற்போது உள்ள விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய ஆவணங்களை, கோப்புகளை ஆய்வு செய்ய நேரம் ஒதுக்குமாறு வேண்டுகிறோம்.

3. 1989-ம் ஆண்டு சேலம் விமான நிலையத்துக்காக நிலம் இழந்தவர்களின் நஷ்டஈடு, வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆய்வுசெய்ய சரியான நேரத்தை ஒதுக்குமாறு வேண்டுகிறோம்’ உள்ளிட்ட கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செந்தில்குமார் கூறுகையில், ”இந்த விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்காக 1989-ம் ஆண்டு 165 ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலையத்துக்கு நிலம் அளித்தவர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, வீடு கட்டிக் கொடுக்கப்படும். நீதிமன்றம் சொல்லும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவோம் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.

தற்போது விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கன்பட்டி, குப்பூர், சட்டூர், சின்னவள்ளியூர், பம்பரம்பட்டியனூர், தும்பப்பாடி, சின்னநடுப்பட்டி, நாகலூர், கொண்டையனூர், குருவிரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 600 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் மூடிக் கிடந்த விமான நிலையத்தை எதற்காக திறந்து எங்களுடைய விளை நிலங்களை கையகப்படுத்துகிறார்கள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொகுசாக விமானத்தில் சேலம் வந்து செல்வதற்காக எங்களுடைய விளை நிலங்களை பறிகொடுக்க முடியாது. ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போல, தற்போது எங்களையும் ஏமாற்ற எடப்பாடி பழனிசாமி அரசு நினைக்கிறது. நாங்கள் எங்க உயிர் போனாலும் நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.