தீக்குளித்த தி.மு.க தொண்டர்கள்… உச்சகட்ட பரபரப்பான போராட்டக்களம்

0 16

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோவையில் தி.மு.க-வினர் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டியும் வலியுறுத்தி, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவை தி.மு.க-வின் 39-வது வட்ட கழகச் செயலாளர் பி.டி.முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும், அவினாசி சாலையில் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தனர். அப்போது, பீளமேடு சிக்னல் அருகே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஓடினர். இதனால், உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் இருவரையும் பிடித்து, மண்ணெண்ணெய் பாட்டிலையும் பிடுங்கி, அவர்களைக் கைது செய்து, பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க மற்றும் விவசாயிகள் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., தலைமையில், சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் சார்பில், தனித்தனியாக போராட்டம் நடத்தப்பட்டது.

அதேபோல, மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கோவை பத்திரிகையாளர்கள் இன்று ஒரு நாள் கறுப்புச்சட்டை அணிந்து பணிபுரிகின்றனர்.

மத்திய அரசைக் கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பத்திரிகையாளர்கள் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.