சேலத்தில் வரும் 5-ம் தேதி 25,000 கடைகள் மூடப்படும்! – வணிகர் சங்கம் அறிவிப்பு

0 17

5-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் தி.மு.க முழு பந்த் அறிவித்த நிலையில், `சேலம் மாவட்டத்தில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோடு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று சேலத்தைச் சேர்ந்த அனைத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுபற்றி சேலம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயசீலன், ”உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதால், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சேலத்தில் வரும் 5-ம் தேதி சேலம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும்.

காவிரி நீர் என்பதும் தமிழகத்தின் உயிர் நீர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராடும் அனைத்து தரப்பு மக்களின் போராட்டமும் வெற்றி பெறுவதற்காக 3-ம் தேதி நாங்கள் அறிவித்த கடையடைப்பு போராட்டம் 5-ம் தேதி நடைபெறும். 5-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் விடுமுறை அளித்துவிடுவதால் இந்தப் போராட்டம் யாருக்கும் இடையூறு இல்லாமல் நடைபெற இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் 25,000 பதிவு செய்யப்பட்ட கடைகள் இருக்கிறது. பதிவு செய்யப்படாத கடைகளும், சிறு, குறு கடைகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அதையடுத்து, வரும் 5-ம் தேதி முழு கடை அடைப்பு செய்யப்படும். சேலம், ஆத்தூர், வாழப்பாடி என சேலம் மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கத்தினர் கடைகள் மூடப்பட்டு மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப் போராடுவோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.