“ஐ.பி.எல் போராட்டத்தில் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டேன்!’’ – சீரியல் நடிகை புகார்

0 12

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டேன் என்று நடிகை நிலானி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். .

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகள் நேற்று அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீஸார் தடியடி நடத்தினர். அதில், நடிகை நிலானிக்கும் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. இதுதவிர, சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 10 பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து காவிரி மீட்புக் குழு மற்றும் இயக்குநர் பாரதிராஜா, பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ-க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், கௌதமன் ஆகியோர் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, நடிகை நிலானி, போலீஸார் மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். “;நான் சின்னத்திரையிலும் சினிமாவிலும் நடித்துவருகிறேன். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றேன். போலீஸ் நிலையம் அருகே வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் நாங்கள் நின்று அறவழியில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த மொழி தெரியாத போலீஸார், எங்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். உடனே, சாலையின் ஓரத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீஸ்காரர், என் தோள்பகுதியில் கையை வைத்தார். அதை என் அருகில் நின்றவர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது திடீரென எனக்கு முன்னால் நின்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

இதனால், அங்கிருந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். போலீஸார் தாக்கியதில் என் மீது சிலர் விழுந்தனர். இதனால் நானும் கீழே விழுந்தேன். அதில் எனக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. என் அருகில் நின்ற இன்னொரு பெண்ணுக்கும் காலில் காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காகப் போலீஸாரை சிலர் தாக்கினர். போராட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. தமிழன் என்ற உணர்வு அடிப்படையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், என்னிடம் போலீஸார் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அது வன்முறை என்றே தெரிகிறது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, சீமான் மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். எங்களது போராட்டம் தொடரும். நான் ஏற்கெனவே, ஐல்லிக்கட்டு, நீட் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன்”; என்றார்.

Leave A Reply

Your email address will not be published.