“கடை கடையா ஏறி பொழச்சவ…இன்னைக்கு அரசு வேலைல இருக்கேன்!”- திருநங்கை சாரதா #NationalTransgenderDay

0 12

ஏப்ரம் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள். அதிகம் தெரியாத, தங்களைப் புதிதாக சமூகத்துக்கு வெளிப்படுத்தி வரும் சாதனை திருநங்கைகளை இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் விரிவாகப் பார்க்கலாம்.

”முன்னாடி என் பிழைப்புக்காக கடை கடையா ஏறிட்டிருந்தேன். இப்போ, அரசு வேலையில் கெளரவமா வாழ்ந்துட்டிருக்கேன்” எனச் சொல்லும்போதே, அவர் குரலில் கம்பீரமும் முகத்தில் புன்சிரிப்பும் மிளிர்கிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, அமீர் பாளையத்தைச் சேர்ந்தவர், சாரதா. நெ.மேட்டுப்பட்டி இந்து தொடக்கப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர். இந்த நிலைக்குக் கடந்துவந்த வலி மிகுந்த பயணம் பற்றிப் பகிர்கிறார்.

“ஒரு குக்கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எங்க வீட்டுல நானும் அண்ணனும். ஆணாகப் பிறந்தாலும் சின்ன வயசிலேயே பொண்ணுங்க பண்ற விஷயங்கள் மேலதான் அதிக ஆர்வம் இருந்துச்சு. தினமும் அடிகுழாயில் தண்ணீர் பிடிச்சு இடுப்புல வெச்சு தூக்கிட்டு வருவேன். வாசல் தெளிச்சு கோலம் போடுவேன். அதையெல்லாம் ரொம்ப விரும்பி செஞ்சேன். என் நடவடிக்கையைப் பார்த்துட்டு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. தெருவுல, ஸ்கூல்ல என நான் போகும்போதும் வரும்போதும் கீழ்தரமா கூப்பிடுவாங்க. அப்போவெல்லாம் என் மனசு முழுக்க ரணமா வலிக்கும். யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள்ளே உட்கார்ந்து அழுதுட்டு வருவேன்” என்கிற சாரதா, தான் பட்ட கஷ்டங்களை நம் கண் முன் நிறுத்துகிறார்.

“ஒரு கட்டத்துக்கு மேலே என் அம்மாவும், ‘உன் அண்ணன் எவ்வளவு கம்பீரமா இருக்கான். நீ ஏன்டா இப்படி இருக்கே?’னு கேட்டு திட்ட ஆரம்பிச்சாங்க. என்னைப் பற்றி எனக்கே சரியா புரியாதபோது, அவங்களுக்கு எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை. கேலிகளையும் வலிகளையும் பொறுத்துட்டு எப்படியோ பத்தாவது வரை படிச்சுட்டேன். அதுக்கு மேலே படிக்க முடியலை. 19 வயசுல வீட்டைவிட்டு வெளியேறி அதே ஊரில் தனியாக இருக்க முடிவு செஞ்சேன். திருநங்கைகள் பற்றிய சரியான தெளிவு இங்கே யாருக்கும் இல்லை. பெரிய பெரிய ஊர்களிலேயே வீடு கொடுக்க மாட்டாங்க. சாதாரண கிராமத்தில் அவ்வளவு சுலபமா வீடு கிடைச்சிருமா? தெருத்தெருவா அலைஞ்சேன். கடைசியா ஒருத்தங்க வீடு தர சம்மதிச்சாங்க. ஆனால், அதிக வாடகை கேட்டாங்க. சின்னதா செட் போட்ட அந்த வீட்டுக்கு 2500 ரூபாய் வாடகை. சரி, தங்கறதுக்கு இடம் கிடைச்சா போதும்னு சம்மதிச்சேன். அந்தக் கிராமத்திலேயே அதிகமா வாடகை கொடுக்கிறது நான் மட்டும்தாங்க.

வீட்டு வாடகையைக் கொடுக்கவும், என் பசியைத் தீர்த்துக்கவும் பணம் வேணுமே. கடை கடையா ஏற ஆரம்பிச்சேன். அப்புறம்தான் கிரேஸ் பானு அக்காவைச் சந்திச்சேன். அவங்க கொடுத்த ஊக்கம், தன்னம்பிக்கையாலும், கடை ஏறுவதை விட்டுட்டு சொந்தமா உழைச்சு சம்பாதிக்க முடிவு செஞ்சேன். அப்புறம், என்னை வெளிப்படுத்திக்காமல் ‘ஆண் உடை’ போட்டுக்கிட்டு ஒரு தனியார் பஸ் நிறுவனத்தில் நடத்துநர் வேலை கேட்டேன். அவங்களும் கொடுத்தாங்க. ஆனால், அந்த வேலையிலும் என் நடவடிக்கையைப் பார்த்துட்டு பலர், ‘நீ ஏன் பொண்ணு மாதிரி நடக்கறே. ஏன் சிணுங்கிச் சிணுங்கிப் பேசறே’னு கேட்டுட்டே இருப்பாங்க. சிரிச்சு மழுப்பி சமாளிச்சாலும் விடமாட்டாங்க. ‘என்னடா வாழ்க்கை இது, இப்படி பொழைக்குறதுக்கு தற்கொலையே செஞ்சுக்கலாம்னு பலமுறை யோசிச்சுருக்கேன்” என்கிற சாரதா அந்த வலி நிமிடங்களை நமக்குள் கடத்துகிறார்.

“அப்புறமா ஊர்க்காவல் படையில் வேலை கிடைச்சது. அப்புறம்தான் என்னைக் கேலி, கிண்டல் செஞ்சவங்க மாறினாங்க. இவங்க போலீஸ் வேலை பார்க்கிறாங்க. கேலி பண்ணக்கூடாதுன்னு என் முன்னாடியே சொல்வாங்க. மூணு வருஷம் ஊர்க்காவல் படையில் இருந்தேன். அப்போதுதான் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆள் தேவைங்கறது தெரிஞ்சு, கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். அவர் நல்ல மனசோடு எனக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தார். எனக்குக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆசை இருந்துச்சு. ஆனால், தத்தெடுக்கவும் சொத்து இருக்கணுமாம். அதுக்கு நான் எங்கே போவேன். அந்த ஆசையைத் தூக்கிப் போட்டுட்டேன். ஆனால், அந்த ஆசைக்குக் கடவுளே கொடுத்த வேலையாக இது இருக்கு. தினமும் நிறையக் குழந்தைகளோடு பழகும்போது எனக்குள்ளே ஒரு தாய்மையை உணர்வேன்” என்ற சாரதா கண்களில் ஆனந்தச் சாரல்.

Leave A Reply

Your email address will not be published.