`இங்கிருந்து கஞ்சா…அங்கிருந்து தங்கம்!’ – பண்டமாற்று முறையில் கொடிகட்டிப் பறக்கும் கடத்தல் தொழில்!

0 12

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்குக் கடத்தி வர முயன்ற 2.6 கிலோ தங்கம் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்துவதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்துவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது. பல்வேறு பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பையும் மீறி இது போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் நேற்று மண்டபத்தை அடுத்துள்ள வேதாளைப் பகுதியில் வாகனச் சோதனையின் போது 3 கார்களில் 136 கிலோ கஞ்சா பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றைக் கடத்தி வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலோன் சேகர், விஸ்வநாதன், கோபுரதன், சேகர் என்ற சீலன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 7 செல் போன்களும், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வர முயன்ற தங்கக் கட்டிகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். யாழ்ப்பாணம் அருகே உள்ள பேசாலை கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்ற பிளாஸ்டிக் படகினை இலங்கை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.6 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர் படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் ராமேஸ்வரம் பகுதியில் ஒரு கோடி மதிப்புடைய கஞ்சாவும், இலங்கை கடல் பகுதியில் 50 லட்சம் மதிப்புடைய தங்கக் கட்டிகளும் சிக்கியிருப்பது பண்டமாற்று முறையில் கடத்தலில் ஈடுபடுவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.