நிஜாம் பாக்கு நிறுவனத்தைக் குறிவைத்த ஐ.டி அதிகாரிகள்! முக்கிய ஆவணங்கள், பணம் பறிமுதல்

0 13

நிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக, இன்றும் அந்தச் சோதனை தொடர்கிறது.

தமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம், புதுக்கோட்டை நகரைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவருகிறது. இதன் உரிமையாளருக்குச் சொந்தமாகப் புதுக்கோட்டை, மதுரை, சென்னையில் சில இடங்களில் தனி பங்களாக்களும் அலுவலகங்களும் இருக்கின்றன. அத்தனை இடங்களிலிலும் ஒரே சமயத்தில் நேற்று காலை 11 மணிக்குமேல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள். புதுக்கோட்டை நகரிலும் ராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள அலுவலகம், ஃபேக்டரி ஆகிய இடங்களுக்கு ஆறு வெவ்வேறு வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்திறங்கினார்கள். அதே நேரத்தில் மதுரை, சென்னையில் தேனாம்பேட்டை, அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சென்னையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக சில கோடிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, புதுக்கோட்டையில் செயல்பட்டுவரும் ஃபேக்டரி, அலுவலகம் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனர். இதில்,முக்கிய ஆவணங்களும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இன்றும் சோதனை தொடரப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை, இரவு முடிந்துவிடும் என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில், இன்றும் தொடர்கிறது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பல்வேறு முக்கிய ஆவணங்கள்குறித்த விளக்கத்தை, நிஜாம் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் இன்று விசாரணை செய்துவருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.