சூரப்பா நியமனம்… அரசாங்கத்தின் ஆதரவும்… அரசியல்வாதிகளின் எதிர்ப்பும்!

0 15

தமிழகத்தில், சமீபகாலமாகப் பிரச்னைகள்தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்று சொன்னால், அது மிகையாகாது. காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், துணைவேந்தர் சூரப்பா நியமனம் உள்ளிட்ட பிரச்னைகளே அதற்கு உதாரணம்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ள சூழலில், காவிரி விவகாரத்துக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமன விவகாரம். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தராக நியமித்தது, தமிழக அரசியல் களத்தில் சூறாவளிப் புயலைக் கிளப்பி உள்ளது.

“துணைவேந்தராகச் சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில், தமிழகத்தின் தன்மானம் காற்றில் பறக்கிறது” என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே தமிழக அமைச்சர்கள் சிலர் சூரப்பா நியமனத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர்கள் கருத்து!

“ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டே துணைவேந்தரை நியமித்துள்ளார். இதில், மாநில அரசுக்குச் சம்பந்தமில்லை. அரசு அதில் தலையிட முடியாது” என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “துணைவேந்தர் நியமனத்தில் அரசாங்கத்துக்கு நேரடி சம்பந்தம் இல்லை. தேடல் குழுவில் ஓர் உறுப்பினரை நியமிக்கிறோம். அவ்வளவுதான். அவர்கள் மூன்று பேரைக் கவர்னரிடம் பரிந்துரை செய்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் யாரை துணைவேந்தராக நியமிக்கலாம் என்பது பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்கிறார். இதில், அரசாங்கத்துக்குத் துளியும் தொடர்பில்லை. அரசாங்கத்தைக் கலந்தாலோசிப்பதுமில்லை; அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதுமில்லை. ஆனால், தமிழகத்திலிருந்து துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்படாதது உண்மையிலேயே வருத்தம்தான்” என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

“அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமனம் செய்திருப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை. தமிழக அரசிடம் அவர் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும்” என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், “கமிட்டியின் அடிப்படையில் துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு ஆளுநருக்கு அளித்துள்ளது. இந்தியாவில் சிறந்துவிளங்கும் கல்வியாளர்கள், பல மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநரால் துணைவேந்தராகச் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இந்தத் துணைவேந்தர் நியமனம் விதிகளின்படி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். தேவையின்றிச் சேற்றை வாரி இறைக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரப்பா நியமனத்தில் அமைச்சர்களின் கருத்துகள் குறித்தும், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் விமர்சகர்களிடம் கருத்து கேட்டோம்…

பலவீனமான அரசாங்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “பொதுவாகத் துணைவேந்தர் நியமிக்கப்படும்போது அரசும், ஆளுநரும் இணைந்து ஓர் இணக்கமான முறையில்தான் செயல்படுவார்கள். ஆனால், இந்தமுறை என்ன நடந்தது என்று தெரியவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா மிகத் திறமையானவராகக்கூட இருக்கலாம். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடிய அளவுக்கு, தமிழகத்தில் தகுதிவாய்ந்த பேராசிரியர் ஒருவர்கூட இல்லையா என்பதுதான் கேள்வி? ஒரு துணைவேந்தர் என்பவர் திறமைவாய்ந்தவராக, நேர்மையானவராக, ஊழலற்றவராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவரை நியமனம் செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு, ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதுபோன்ற திறமையானவர் வேறு எவரும் கிடைக்கவில்லையா என்பதுதான் கேள்வி. இதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. மாநில அரசு பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம். மாநில அரசு சுதந்திரமாக, சுயேச்சையாகச் செயல்பட முடியாத, பலவீனமான ஓர் அரசாங்கமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசு தன் விருப்பங்களை எல்லாம் ஆளுநர் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சூரப்பா நியமனம் ஓர் உதாரணம்” என்றார் மிகத் தெளிவாக.

அப்பட்டமான ஏமாற்று வேலை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, “;சூரப்பா மிகத் திறமையானவரா, இல்லையா என்பது இப்போதைய கேள்வியல்ல… தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்தமாக மாநில அரசு பலவீனம் அடைந்திருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என்றார்.

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு, மத்திய பி.ஜே.பி. அரசுக்கு அடிபணிந்து, பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய சூழ்நிலையில், காவிரி விவகாரத்தில் யாரும் எதிர்பாராதவகையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது, சூரப்பா நியமனத்தின் மூலம் அரசின் பலவீனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.