`குடிநீருக்கு உத்தரவாதம் இல்லாதபோது கிரிக்கெட் ஆடுவது ஆத்திரமூட்டக் கூடியது!’ – முத்தரசன்

0 16

தமிழகத்தில் குடிதண்ணீர் மற்றும் உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என அடம்பிடித்து செயல்படுத்துவது ஆத்திரமூட்டும் செயலாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 16 உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பல வடிவங்களில் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டாம் என வேண்டிக் கேட்டுக்கொண்டனர். விளையாட்டை அரசியல் ஆக்க வேண்டும் என எவருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், குடிதண்ணீர் மற்றும் உணவுக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் விளையாடி ஆக வேண்டும் என அடம்பிடித்துச் செயல்படுத்துவது ஆத்திரமூட்டும் செயலாகும். சென்னையில் நேற்று தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள்மீது காவல்துறை காட்டுமிராண்டித்தன தாக்குதலை நடத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், “இத்துடன், காவிரி நீர் உரிமை தொடர்பான போராட்டங்களில் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்” என்றும் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.