வாகனச் சோதனையில் போலீஸை கலங்கடித்த 4 பேர்! 3 கார்கள், 136 கிலோ கஞ்சா பறிமுதல்

0 18

மண்டபத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா பார்சல்களை போலீஸார் கைப்பற்றினர். இவற்றை கடத்துவதற்குப் பயன்படுத்திய 3 கார்கள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. 3 நாள்களுக்கு முன்னதாக இலங்கையில் இருந்து வந்த படகு ஒன்றில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ஊடுருவிய சம்பவம் நடந்தது.

இந்நிலையில், நேற்று இரவு க்யூ பிரிவு போலீஸார் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கார்களை மறித்து சோதனையிட்டனர். இந்தச் சோதனையின்போது, 3 கார்களில் 136 கிலோ கஞ்சா பார்சல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றைக் கடத்தி வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சிலோன் சேகர், விஸ்வநாதன், கோபுரதன், சேகர் என்ற சீலன் ஆகிய 4 பேரையும் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 7 செல் போன்களும், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 கார்களையும் பறிமுதல்செய்தனர்.

இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு, சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.