எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் சட்ட தீர்ப்பு விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

0 20

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து இன்று தி.மு.க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் (SC/ST protection act) சட்டத்தின்கீழ் அரசு அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களை உடனடியாகக் கைது செய்யக் கூடாது. இந்த விதிகளின்கீழ் அரசு அதிகாரிகளைக் கைது செய்யும் முன் டி.எஸ்.பி அந்தஸ்துக்குக் குறைவில்லாத காவல்துறை அதிகாரிகள், முறையாக வழக்குகளை விசாரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளைக்
கைது செய்வதற்குமுன் ஆணையத்திடம் முறையான முன் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களின் பல பகுதிகளில் போராட்டங்கள், கலவரங்கள், வன்முறைகள்
போன்றவை நடைபெற்றன. இந்த வன்முறைச் சம்பவங்களில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் பட்டியலின மக்களின் படுகொலை உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் ஏப்ரல் 16-ம் தேதியன்று தி.மு.க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னதாக நடந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க எம்.பி கனிமொழி, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் இதில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.