கோவை டு கொடைக்கானல்..! முதல்வர் செல்லும் சாலையை மட்டும் செப்பனிடும் அதிகாரிகள்

0 50

பல வருடங்களாக சேதமடைந்துகிடக்கும் சாலைகளை சரிசெய்வதற்கு முன்வராத அதிகாரிகள், இப்போது முதல்வர் செல்லும் வழித்தடத்தை மட்டும் பார்த்துப் பார்த்து செப்பனிடுவது தாராபுரம் பகுதி மக்களைக் கொதிப்படையவைத்திருக்கிறது.

கோவை மற்றும் நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்துகொண்டுவிட்டு, இன்று நேராக கொடைக்கானல் செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கோவையிலிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் பழனிசாமியின் வாகனம், அலுங்காமல் குலுங்காமல் அவதியற்று செல்ல வேண்டும் என்பதில் நெடுஞ்சாலைதுறையினர் மிக அக்கறையோடு இருக்கிறார்கள். எனவே, பழனிசாமியின் வாகனம் கடந்துசெல்லவிருக்கும் திருப்பூர் – திண்டுக்கல் மாவட்ட வழித்தடங்களைக் கடந்த சில நாள்களாகவே இரவு பகல் பாராமல், மிகத் தீவிரமாக செப்பனிட்டுவருகிறார்கள்.

தாராபுரம் நகராட்சியில், குறிப்பிட்ட சாலை வழிகளை மட்டும் தொடர்ந்து 2 நாள்களாக அதிகாரிகள் செப்பனிட்டு வர, எதற்காக இத்தனை ஆர்வமாய் வேலைசெய்கிறார்கள் என்று அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அங்கிருந்த அதிகாரிகளிடம் போய் என்னவென்று கேட்க, நம்ம எடப்பாடி ஐயா இந்த வழியாகத்தான் காரில் செல்லப்போகிறார் என்று புன்னகை மலர கூறியிருக்கிறார் ஓர் அதிகாரி. கொதித்துப்போன மக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அப்பகுதியினர், ‘மேற்கு பஜனைத் தெரு, டி.எஸ்.கார்னர்னு ஊர்ல எத்தனையோ சாலைகள் சேதமடைந்துள்ளன. சரி பண்ணுங்கன்னு 5 வருஷமா கேட்டுட்டிருக்கோம். ஆனா, ஒரு அதிகாரிகூட என்னன்னு வந்து பார்க்கல. இப்போ, முதல்வர் ஒருநாள் இந்த வழியா போறாருன்னு மொத்த அதிகாரிகளும் ராப்பகலா வேலை செஞ்சு ரோடு போட்டிருக்காங்க. இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்க்கவேண்டியிருக்குமோ…’ என்று புலம்பிவிட்டுச் சென்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.