தாய்ப்பாலை நிறுத்துவது எப்படி? கேள்வியும் மருத்துவரின் விளக்கமும்.

0 22

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் அந்தத் தருணம்தான், ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் இருக்கும் தாய்மையை முழுவதுமாக உணர்கிறாள். குழந்தை பிறந்தவுடன் தாயின் உடலில் சுரக்க ஆரம்பிக்கும் தாய்ப்பால் என்னும் உயிர் உணவு, அந்தக் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து, ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் தானே சுரக்க ஆரம்பித்ததுபோல தானே சுரப்பை நிறுத்திக்கொள்வதில்லை. குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குப் பின்போ, சில காலம் கழித்தோ, திட உணவுகளைக் குழந்தை உண்ண ஆரம்பிக்கும். அந்த நேரத்தில், தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவது, ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால். அந்தச் சாவலை எதிர்கொள்வதற்கான அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார், மகப்பேறு நல மருத்துவர் ஆனந்த் பிரியா.

குழந்தை பிறந்ததும் தாய்மார்களின் உடலில் புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் பால் சுரப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பெண் உடலில் சுரக்கும் முதல் பாலான, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை தரவல்லது. சில தாய்மார்கள் பால் ஊறவில்லை என்று கூறுவது உண்டு. இதற்கு வாய்ப்பே இல்லை. தாயின் மார்புக்காம்பில் குழந்தையானது சரியான முறையில் வாய்வைத்து பாலை குடிக்கக் குடிக்க, பால் ஊறிக்கொண்டே இருக்கும்.

தாய்மார்கள் சாப்பிடும் உணவுக்கும் பால் சுரப்புக்கும் பெரிய அளவு சம்பந்தம் இல்லை. இந்த உணவுகளைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எதுவுமில்லை. பிறந்த குழந்தையின் குடல் சிறிதாக இருக்கும் என்பதால், சிறிது பால் குடித்தாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால், குழந்தையின் பசி தீர்ந்துவிட்டது என எண்ணிவிட வேண்டாம். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8 அல்லது 10 முறையாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எனக் கணக்கு வைத்துக்கொள்ளலாம். மாதங்கள் செல்லச் செல்ல தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என்றோ, குழந்தை பசிக்கு அழும் வேளையிலோ கொடுக்கலாம்.

குழந்தைப் பிறந்தது முதல் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதில், குழந்தைப் பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதும். அதன்பிறகு, திட உணவுகளைச் சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்தலாம். அப்போது, தாய்ப்பால் அளவைக் குறைக்க ஆரம்பிக்கலாம். குழந்தையின் ஒரு வயதுக்குப் பிறகு, ஒருநாளைக்கு மூன்று முறை மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதைப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளும் திட உணவைச் சாப்பிட ஆரம்பித்ததால் தாய்ப்பால் குடிப்பதை குறைத்துக்கொள்வர். இந்தச் சமயத்தில் தாய்மார்களுக்கு, பால் கட்டுதல், பால் கசியுதல், மார்பு தசை இறுகுதல், மார்பில் கூச்சம் போன்றவை ஏற்படும். அப்போது, எக்காரணம் கொண்டும் சுரக்கும் பாலை பிழிந்து வெளியேற்ற கூடாது. இதனால், தாய்மார்களுக்குத்தான் எனர்ஜி அளவு குறையும். அதற்குப் பதில், பாலை பம்ப் செய்யும் கருவி மூலம் பம்ப் செய்து, குழந்தைக்குப் பாட்டிலிலோ, ஸ்பூன் மூலமாகவோ புகட்டலாம். பால் கட்டும் சமயத்தில் காய்ச்சல், உடல் சோர்வு, வலி போன்றவை ஏற்படும். இந்தச் சமயத்தில் வீட்டு வைத்தியங்களைத் தவிர்த்து, மருத்துவரை அணுகுவதே நல்லது.

குழந்தைக்குத் தாய்ப்பாலை நிறுத்துவது என்று முடிவுசெய்ததும், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டும் தாய்ப்பால் புகட்டுங்கள். பெண்கள் நல மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நலனுக்கு ஏற்ப அவர்கள் அளிக்கும் தாய்ப்பால் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரையை வாங்கி உபயோகியுங்கள். மல்லிகைப்பூவைக் கட்டுவது, வேப்பிலை தேய்ப்பது போன்ற மூடபழக்கவழக்கங்களை பின்பற்றாதீர்கள். தாய்ப்பாலை நிறுத்த மாத்திரை எடுத்துக்கொண்டால், அடுத்த குழந்தைக்குப் பால் சுரக்காது போன்ற கருத்துகளைத் தயவுசெய்து நம்ப வேண்டாம்.

தாய்ப்பால் நிறுத்துவதற்கான மாத்திரையை எடுத்துக்கொண்டாலும் பால் சுரப்பது உடனே கட்டுப்படாது. குறைந்தது 3 முதல் 5 நாள்கள் ஆகும். அரிதாக சிலருக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது, ஹார்மோன் பிரச்னை. புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன் சுரப்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தாய்ப்பாலை நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து, வேறு காரணங்களால் இது ஏற்படாது. புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இதைக் குணப்படுத்திவிட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால், அறுவைசிகிச்சை மூலம்தான் சரிசெய்ய முடியும்.

குழந்தைக்குத் தாய்ப்பாலை அளிக்கும் சமயத்தில், பெண்கள் நிறையத் திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இது, அவர்கள் உடலில் தண்ணீரின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க உதவும். அதேபோன்று தாய்ப்பால் நிறுத்திய பிறகும், கீரைகள், பேரீட்சை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதால் இழந்த எனர்ஜியைப் பெற்று ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.

Leave A Reply

Your email address will not be published.