தஞ்சை வந்தடைந்தது நடராஜன் உடல்..! கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா

0 21

சென்னையில் இறந்த நடராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார்.

சசிகலா கணவர் நடராஜனுக்குக் கடந்த அக்டோபர் மாதம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா பரோலில் 5 நாள்கள் வந்திருந்து கணவரை கவனித்துக்கொண்டார். அதன் பிறகு வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் நீண்ட ஓய்விலிருந்து வந்த நடராஜனுக்குச் சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னைக் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டதோடு செயற்கை சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த நடராஜன் உடல் எம்பாமிங் செய்யபட்டு பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக 1 மணி வரை வைக்கபட்டிருந்தது. பின்னர் தஞ்சாவூரில் உள்ள நடராஜன் இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவிற்கு தஞ்சாவூரை விட்டு வெளியே செல்லக் கூடாது, பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளோடு 15 நாள்கள் பரோலில் வருவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து பெங்களூருவிலிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்தார் சசிகலா. வரும் போது யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தவர் நீண்ட நேரம் அழுதபடியே இருந்தாராம். இதற்கிடையில் சரியாக இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்குள்ளே கொண்டு செல்லப்பட்டது. அப்போது கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரே காரில் சசிகலா மற்றும் தினகரன் தஞ்சாவூர் சென்றனர். அப்போது தொண்டர்கள் கூட்டம் காரைச் சுற்றி நின்று கொண்டிருந்ததால் பத்து நிமிடங்களுக்கு மேல் சசிகலா காரிலேயே அமர்ந்திருந்து பின் வீட்டின் உள்ளே சென்றார். அந்த நேரத்தில் காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

Leave A Reply

Your email address will not be published.