சட்டப்பேரவையை கலங்கடித்த தமிமுன் அன்சாரி!

0 22

தமிழக சட்டசபையில் சபாநாயகர் இருக்கையின் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்ட தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ-வை போலீஸார் கைது செய்தனர்.

கேரளா- தமிழக எல்லையான நெல்லை மாவட்டம், செங்கோட்டை வழியாக ராமராஜ்ஜிய ரத யாத்திரை இன்று வந்தது. அதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபையிலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விளக்கமளித்தார். இந்தச் சூழ்நிலையில், சட்டசபையில் மூம்மூர்த்தி எம்.எல்.ஏ-க்கள் என்று அழைக்கப்படும் தனியரசு, தமிமுன்அன்சாரி, கருணாஸ் ஆகியோர் தங்களுடைய இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது, இருக்கையை விட்டு எழுந்த தமிமுன்அன்சாரி, சபாநாயகர் இருக்கையை நோக்கி விரைந்துவந்தார். ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தபடி கோஷமிட்ட அவரை சபாநாயகர் தனபால், இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தினார்.

இருப்பினும் சட்டசபையில் தரையில் அமர்ந்த தமிமுன்அன்சாரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினார். தமிமுன்அன்சாரிக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் சபையில் கோஷமிட்டனர். இதைப் பார்த்த சபாநாயகர் தனபால், ரத யாத்திரை தொடர்பாக ஏற்கெனவே முதல்வர் விளக்கமளித்துவிட்டார். எனவே, நீங்கள் இருக்கையில் அமருங்கள் என்று தெரிவித்தார். தமிமுன்அன்சாரியின் தர்ணா போராட்டத்தால் இன்று சட்டசபையில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சட்டசபையிலிருந்து வெளியேறிய தமிமுன்அன்சாரி, சாலை மறியலில் ஈடுபட முயன்றார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.