`1950 எண்ணில் புகார் அளியுங்கள், 10 நிமிடத்தில் நடவடிக்கை!- கரூர் கலெக்டர் அறிவிப்பு

0 7

“தேர்தல் முறைகேடுகள் குறித்த காணொலிகளை புகாராக அனுப்ப, ஆண்ட்ராய்டு போன் மூலம் புகார் அளிக்க தேர்தல் ஆணையத்தால் புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது” என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.கரூர் பேருந்து நிலையத்தில், வாக்காளர்கள் எந்தச் சின்னத்துக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அறியும் வண்ணம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மாதிரி முகாமை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ராஜசேகரன், கூடுதல் கண்காணிப்பாளர் பாரதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் வட்டாட்சியர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தி தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட வாக்களிப்பதன் அவசியம் குறித்த காணொலி பிரசார வாகனத்தையும் பார்வையிட்டார்.பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்ட ஆட்சியரும், கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியுமான அன்பழகன், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறைந்துள்ளதால், அரசியல் கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதில், எவ்வித பாகுபாடுமின்றி நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடுநிலையாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் விருப்பம். மேலும், 1950 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் அளிக்கப்பட்டால், புகார் அளித்த 10 நிமிடத்துக்குள் சம்பவ இடத்துக்கு பறக்கும் படையினர் விரைந்து, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதுவரை, கரூர் மாவட்டத்தில் பெரிய அளவிலான பொருள்களையோ, பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறாமலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இரவு பகலாக மூன்று சுற்றுகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ஆண்ட்ராய்டு போனில், அதன்மூலம் கூகுள் பிளே ஸ்டோரில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சி விஜில் (cVIGIL) எனும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, நவீன தொழில்நுட்பம் மூலம், தங்கள் பெயர், முகவரி இவற்றை தெரிவிக்காமல், தேர்தல் சம்பந்தமான முறைகேடுகள், பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் உள்ளிட்ட காணொலிகளை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.முன்னதாக கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தேர்தலில், `பொதுமக்களின் கண்காணிப்பில் தேர்தல்’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தச் செயலி சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.