ஆண்டாள் கோயிலில் போடப்பட்ட தாமரை ஓவியத்தை பெயின்ட்டால் அழித்த அதிகாரிகள்!

0 12

ஆண்டாள் கோயிலில் வரையப்பட்ட தாமரை ஓவியம் அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் முத்திரை சின்னமாகவும் ஆண்டாள் கோயில் கோபுரம் விளங்குகிறது. ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாணம் மார்ச் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது.தற்போது ஆண்டாளை வரவேற்பதற்காக கோயில் வளாகத்தில் பெயின்ட்டால் பூக்கள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் நேற்று கோயிலுக்கு வந்தனர். அப்போது தாமரை பூவின் படங்களும் வரையப்பட்டிருந்தது தெரியவந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பா.ஜ.கவின் சின்னமாக உள்ள தாமரை ஓவியத்தை தேர்தல் விதிப்படி அழிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் தாமரை ஓவியம் அழிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.கோயிலுக்குள் தேர்தல் அதிகாரிகள் ஏன் வர வேண்டும். சாமியோடு தொடர்புடைய தாமரை ஓவியத்தை அழிக்கும் அதிகாரிகளால் வானத்தில் தெரியும் சூரியன், பிறைநிலா போன்றவற்றை மறைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உடனடியாக தாமரை ஓவியத்தை அதிகாரிகள் வரைந்துகொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.