“வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்!’’ – தஞ்சை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கோலம்

0 5

தஞ்சாவூரில் கல்லூரி ஒன்றில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளுக்குகிடையே கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் என் வாக்கு என் உரிமை என ஒரு விரல் புரட்சியைக் குறிக்கும் வகையில் கோலமிட்டதோடு பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது வாழ்கையை அடகு வைப்பதற்குச் சமம் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.தஞ்சாவூரில் உள்ளது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் தேர்தலில் மாணவிகள் மத்தியில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட கோலங்களைப் போட்டனர். குறிப்பாக, என் வாக்கு என் உரிமை; எங்கள் வாக்கை விலைக்கு விற்க மாட்டோம் என்பதைக் குறிக்கும் வகையில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மேலும், இளம் வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் சொல்லப்பட்டது.கோலபோட்டியில் கலந்துகொண்ட மாணவி ஒருவரிடம் பேசினோம், “பெண்களுக்கு அடுப்பங்கரை மட்டும் இல்லை; அரசியலும் தெரியும். ஒரு விரலில் மை வைத்து  நாம் போடுகின்ற வாக்கு ஐந்து வருடம் அனைவரது  தலையெழுத்தைத் தீர்மானிக்கும். பொதுவாக சமீபகாலமாகப் பணம் கொடுத்து வாக்கு வாங்குவதை அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. வாக்காளர்களும் ஓட்டுக்குப் பணம் வாங்கிவிட்டோம், அதனால் மனசாட்சிபடி பணம் கொடுத்தவருக்கே ஓட்டு போடுவோம் என்கிற நிலையில்தான் பெரும்பாலான வாக்காளர்கள் மன நிலையும் இருக்கின்றன.மாற வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; வாக்காளர்களும்தான். நான் என் வீட்டில் சொல்லிவிட்டேன் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று. இதே போல் எல்லோரும் தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி பணம் பெறாமல் வாக்களிக்கச் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது வாழ்க்கையை அடகு வைப்பதற்குச் சமம். இது போன்ற செயலை யாரும் செய்யக் கூடாது’’ என்றார். 

Leave A Reply

Your email address will not be published.