“நந்தியெம்பெருமான்” திருக்கல்யாணத்தைக் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்!

0 9

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் திருநந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்சியில் கலந்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.                                         சிவபெருமான் தனது பாதுகாவலரான நந்தியெம்பெருமானுக்கு தானே முன்னின்று திருமணம் செய்ததாகவும், நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும் என்ற ஐதீகமும் தான் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம். இத்தகைய தெய்வத் திருமணம் அரியலூர் மாவட்டம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது. வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயசாம்பிகை தேவிக்கும், திருவையாறு சிலாத முனிவரின் புதல்வரான திருநந்தியெம் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது..                                               இவ்விழாவை முன்னிட்டு திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் தனது கோயிலிருந்து காலையில் மாப்பிள்ளை நந்தியெம்பெருமானுடன் புறப்பட்டு வைத்தியநாதன் பேட்டை வழியாகக் கொள்ளிடம் ஆற்றிற்கு எழுந்தருளினார். மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கும் பொருட்டு, மணப்பெண் சுயசாம்பிகை தேவியருடன் மங்காளம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி மேளம் தாளங்கள் முழங்க கொள்ளிடம் ஆற்றிற்கு வந்து மணமகன் வீட்டாரை எதிர்கொண்டு அழைத்தனர். கொள்ளிடம் ஆற்றில் போடப்பட்டிருந்த பந்தலில் மணமகன் வீட்டாருக்குப் பெண் வீட்டார் சார்பில், சீர்வரிசைகள் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இருவரும் ஒருசேரப் புறப்பட்டு திருமழபாடி வந்தடைந்தனர்.                                                      இதனையடுத்து கோவில் முன்பு உள்ள மேடைக்கு மணமகன் திருநந்தியெம்பெருமானும், மணப்பெண் சுயசாம்பிகைதேவியாரும் அழைத்து வரப்பட்டனர். மேடையில் சுவாமிகள் இருவருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், பால் போன்ற வற்றால் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து கும்பநீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. மணமகன், மணமகள் நாதஸ்வர ஊஞ்சல் உற்சவத்துடன் மாலை மாற்றுதல், காப்புக் கட்டுதல் நடை பெற்றது. தொடர்ந்து திருநந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவியும் க்கும் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டனர்.                                                      சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் மணமகன் நந்தியெம் பெருமான், மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் திரு மாங்கல்யத்தை அணிவித்தார். இதனையடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நந்தி திருமணத்தைப் பார்த்தால் முந்தி திருமணம் என்ற ஐதீகத்தையொட்டி, திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள், ஆயிரக்கணக்கான பக்தர்களும் பெருந்திரளாகத்  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.