அதிமுகவின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

0 7

சென்னை: அதிமுகவின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்று திமுகவுக்கு சந்தேகம் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்துவேன் என்றார். ஊழல் நடக்காது என்றார். வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டெடுப்பேன், அதனை இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவேன் என்றார். இது எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் 15 காசாவது போட்டாரா, இல்லை. இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதுபோல் ஏதாவது நடந்துள்ளதா. எடப்பாடி முதல்வரான பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினர். இதில் 3.40 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது. 10 லட்சம் பேருக்கு வேலை என்று அறிவித்திருக்கிறார். எந்த நிறுவனங்களில் இருந்து முதலீடு வந்துள்ளது என்று சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்டு வந்தேன். இதுவரை பதில் வரவில்லை. தேர்தல் பிரச்சாரத்திலாவது ஏதாவது சொல்வாரா என்று காத்திருந்தேன். ஆனால் ஊர் ஊராக போய் விதவிதமாக பேசி வருகிறார். மைக் வைத்து பேசுவதில்லை, போதகர் போல காதில் ஏதோ மாட்டிக்கொண்டு,  திமுக ஆளுங்கட்சி போல் விமர்சனம் செய்து வருகிறார். மாநிலத்திற்கு தேவையான வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை சூப்பர் ஹீரோ, மோடி வெளியிட்டது ஜீரோ. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து செய்யப்படும் என அறிவித்து இருகிறோம். திமுக ஆட்சியில் நீட் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தற்போது உள்ள ஆட்சி அடிமையாகவும்,எடுபிடியாக உள்ளதால் அதிமுக அரசு நுழைய விட்டது.இன்று சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்ட மேடையில் 8 வழி சாலை கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியவுடன் வெட்கம், மானம், சொரணை இருந்தால்  ராமதாஸ் அதனை தட்டிக் கேட்டு இருக்க வேண்டும். நீதிமன்றம் 8 வழி சாலையை ரத்து செய்தது. நிதின் கட்கரி மீண்டும் அதனை கொண்டு வருவோம் என கூறுவது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா? அதிமுகவில் பல கோமாளிகள் உள்ளனர். அதிமுக கூட்டணி ஒரு வியாபாரம். இந்த கூட்டணி தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல. அதிமுகவை அரசியல் நாகரிகம் இல்லாமல் விமர்சனம் செய்துவிட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளனர். வியாபார ரீதியாக வைத்துள்ள கூட்டணி இந்த கூட்டணி. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வந்து இருந்தும் திமுக தோற்றது.அதிமுக வேட்பாளர்களுக்கும்,பொதுமக்களுக்கும் 3 அமைச்சர்கள் தலைமையில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ், வைத்தியலிங்கம் ஆகிய மூவர் பணம் வினியோகம் செய்துள்ளனர். இது வருமான வரித்துறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு அதனை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இதனை காட்டித் தான் தற்போது அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மக்கள் நல் வாழ்வுதுறை தற்போது விஜயபாஸ்கர் தலைமையில் மக்களை சாவடிக்கும் துறையாக மாறியுள்ளது. திமுக மீது களங்கம் ஏற்படுத்தவே பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் வீட்டில் சோதனை செய்கிறார்கள். அதிமுக பல தவறுகளை செய்திருக்கிறது. அதனால்தான் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது.ஆனால் திமுக 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என உளவுத் துறை மூலம் அறிந்து கொண்டு திமுகவை பயமுறுத்தப் பார்க்கிறது.. திமுக ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா, இல்லையா. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இருக்கிறார்களா அல்லது ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்து விட்டார்களா. அதிமுகவின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என திமுகவிற்கு சந்தேகம் உள்ளது. ஸ்ரீ பெரும்புதூர் வாக்காளர்களை தேடி வாக்குக்கு 2 ஆயிரம் பணம்  வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த முறை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகதான் வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக வரும்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.2006 கலைஞர் ஆட்சியில் விவசாய கடன் ரத்து என கூறினோம். யாரும் நம்பவில்லை. பின்னர் கலைஞர் முதல்வரானவுடன் விழா மேடையிலேயே  7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என செய்து முடித்தார். அதேபோல் தான் தற்போது  விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்தியில் உள்ள ஆட்சி அகன்றால் மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி தானாக அகன்றுவிடும். நடைபெறும்  இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி காலி.மத்தியில் ஆட்சி மாற்றம் வரப் போவது உறுதி. அதனால் தமிழகத்தில் மாற்றம் வரப்போவதும் உறுதி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.கண்ணீர் விட்ட டி.ஆர்.பாலுஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், ‘டி.ஆர்.பாலு, தலைவர் கலைஞர் அவர்களின் தம்பிகளில் ஒருவர். இங்கு போட்டியிடுவது எனது நண்பர் டி.ஆர்.பாலு. இந்த தொகுதியில் நிற்கிறார் என்றால் தலைவர் கலைஞர் அவர்களே நிற்கிறார், ஏன் நானே நிற்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்’ என மு.க.ஸ்டாலின் பேசினார். இதை கேட்ட டி.ஆர்.பாலு திடீரென கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.மாநாடுபோல் காட்சியளித்த பிரசார கூட்டம்ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கலந்துகொண்டனர். பிரசார பொதுக்கூட்டமா அல்லது மாநில மாநாடா என்று தோன்றுகிறது என பெருங்கூட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசினார்.பாங்கு ஒலித்ததால் பேச்சை நிறுத்திய ஸ்டாலின்….பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் முஸ்லிம் மசூதி உள்ளது. கூட்டத்தில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அந்த மசூதியில் இருந்து பாங்கு ஒலிக்கத் தொடங்கியது. இதனை கேட்ட ஸ்டாலின் பாங்கு ஒலித்து முடிக்கும் வரை தனது பேச்சை நிறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.