“நாங்க என்ன அவ்ளோ ‘வீக்’காகவா இருக்கோம்?” – ஈரோடு பிரசாரத்தில் அதிரடித்த முதல்வர் பழனிசாமி

0 2

“ஸ்டாலின் என்னைப் பற்றி எப்படி கொச்சையாகப் பேசினாலும், அவரால் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது” என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.ஈரோடு மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரான வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து காங்கேயம் ஈரோடு ஆகிய பகுதிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.காங்கேயத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “இந்தப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென என்னிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நகர்ப்பகுதிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலைகளை அமைக்க வேண்டுமென்றால் நிலத்தைக் கையகப்படுத்தித்தான் ஆக வேண்டும். நிலத்தை எடுக்காமல் எப்படி சாலை அமைக்க முடியும். 8 வழிச்சாலை என்பது மத்திய அரசினுடைய திட்டம். அதில் அவர்கள் கேட்கக் கூடிய நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டிய வேலை மட்டும்தான் மாநில அரசாங்கத்துக்கு இருக்கிறது. சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘விவசாயிகளிடம் பேசி அவர்களின் ஒப்புதலோடுதான் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும்’ எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தற்போதைய சந்தையில் உள்ள மதிப்பைவிடக் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.தி.மு.க மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலைக்காக 800 ஹெக்டேர் நிலம் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா!” என கேள்வியெழுப்பிப் பேசினார்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பேசிய முதலமைச்சர், “8 வழிச்சாலை திட்டத்தில் ஒதுக்கப்படும் 10,000 கோடியில், எடப்பாடி பழனிசாமி 4,000 கோடியை சாப்பிட்டுவிடுவார் என ஸ்டாலின் சொல்கிறார். இன்னும் திட்டமே ஆரம்பிக்கவில்லை, அதுக்குள்ள வாய்க்கு வந்ததை இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கார். என்னைக் கேடி, உதவாக்கரை என எப்படித் தரக்குறைவாகப் பேசினாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. கிராமத்துல இருந்து வந்தாரு, எப்படியாவது இந்தக் கட்சியை உடைச்சிடலாம், ஆட்சியை கவிழ்த்திடலாம்னு ஸ்டாலின் கணக்குப் போட்டார். ஆனால், எதுவும் வேலைக்காகவில்லை. அதேபோல நடைபெறவிருக்கின்ற இடைத்தேர்தல்களில் எல்லா தொகுதிகளிலும் ஜெயித்துவிட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஸ்டாலின் பேசி வருகிறார். நாங்க என்ன அந்தளவுக்கு மோசமாகவா இருக்கிறோம். முதலமைச்சர் நாற்காலி மீதே ஸ்டாலின் கண் வைத்திருக்கிறார். உழைத்து முதலமைச்சராக வேண்டும் என நினைத்தால் பரவாயில்லை.  உனக்கு உழைப்புன்னா என்னான்னே தெரியாது. கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஆரம்பித்து இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறேன். உழைப்பினால்தான் இன்றைக்கு இந்த இடத்தில் நிற்கிறேன். ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டாம் என நான் சொல்லவில்லை. மக்கள் அனுமதித்தால் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.  மக்களிடம் செல்வாக்கு பெற்றால்தான் வெற்றி” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.