உ.பியில் பிரியங்கா பிரசாரம் பாக்.கை விட்டுத்தள்ளுங்கள் நம் இளைஞர்களை பாருங்கள்

0 4

ஆக்ரா: ‘‘பாகிஸ்தானை விட்டுத்தள்ளுங்கள், நம் இளைஞர்கள், விவசாயிகள் நிலையைப் பாருங்கள், அவர்களைப் பற்றி பேசுங்கள்’’ என பாஜ பிரசாரத்தை பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பெதாப்பூர் சிக்ரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாப்பரை ஆதரித்து, அக்கட்சியின் உபி கிழக்குப் பிரிவு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தில் பேசியதாவது: நம் நாட்டைப் பற்றியோ, நம் இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன செய்தது என்பதைப் பற்றியோ பாஜ பேசுவதற்கு பதிலாக, பாகிஸ்தானைப் பற்றியே பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த அரசு ஜனநாயகத்தின் மீதோ, மக்கள் மீதோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.  எனவே, பாகிஸ்தானை விட்டுத்தள்ளுங்கள். இந்தியாவை பற்றி பேசுங்கள். நம் நாடு உண்மையை அடிப்படையாக கொண்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகச் செய்ய முயற்சிப்பவர்களை, இந்த நாடு ஏற்காது. எப்போதோ உண்மையின் பாதையில் இருந்து விலகிவிட்ட உங்களை (மோடி) நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வேலையில்லா திண்டாட்டம், விவசாயக் கடன் சுமை, விளைப்பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காதது போன்ற நாட்டின் உண்மை நிலையை நம் இளைஞர்கள், விவசாயிகளின் கண்கள் வழியாக பார்க்கிறேன்.இவ்வாறு பிரியங்கா பேசினார்.தவறை திருத்தினார்:பிரியங்கா பேசுகையில், ‘‘காங்கிரஸ் அறிக்கையில் அரசு மருத்துவமனைகளில் இலவச சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார். உடனே தனது தவறை உணர்ந்து, லேசாக சிரித்தபடி, ‘‘அதாவது நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை இலவசமாக தரப்படும்’’ என்றதோடு, ‘‘மருத்துவம் முழுமையாக இலவசமாக்கப்பட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.