விதிஷாவில் மோடி போட்டியா? ம.பி யில் கிளம்பும் பரபரப்பு

0 3

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்ற தகவல் பரவியதால் அரசியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதி பாஜ.வின்  அசைக்க முடியாத கோட்டை. பாஜ முன்பு ஜனசங்கமாக  இருந்தபோதே விதிஷாவில் வெற்றி பெற்றிருந்தது. 1967ல் உருவான  விதிஷா மக்களவை தொகுதியை  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசால்  1980, 1984 ஆகிய இரு தேர்தலில் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பாஜ.வின் வி.வி.ஐ.பி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள விதிஷாவில் பாஜ.வின் முக்கிய தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் போட்டியிட்டு எம்.பியாகியுள்ளனர். சிட்டிங் எம்.பி யான சுஷ்மா தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். அதேபோல இந்த தொகுதியில் 5 முறை எம்.பியாக இருந்த சவுகானும் மாநில அரசியலே போதும் என்று விலகிக்கொண்டார். மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு பாஜ இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. விதிஷா உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் சைலேந்திர படேல் போட்டியிடுகிறார். விதிஷாவில் பாஜ தலைமை யாரை களமிறக்கும் என்ற கேள்வி அனைத்து கட்சியினரிடையேயும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி விதிஷாவில் போட்டியிடலாம் என்ற யூகங்கள் மபி.யில் பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மோடி, இரண்டாவது தொகுதியாக விதிஷாவை தேர்ந்தெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மபி பாஜ தலைவர்களிடம் கேட்டபோது, ‘‘விதிஷா பாஜ  வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது. மோடி போட்டியிடுவது உண்மையானால் மகிழ்ச்சியே’’ என்றனர். மே 12ல் தேர்தலை சந்திக்கும் விதிஷா, வி.வி.ஐ.பி அந்தஸ்து தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.