ராகுல் காந்தி கேள்வி மோடியின் பிரசாரத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?

0 5

ஆக்ரா: ‘‘டிவியில் 30 நொடி விளம்பரத்திற்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், பிரதமர் மோடியின் பிரமாண்டமான பிரசாரத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?’’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பெதாப்பூர் சிக்ரி மக்களவை தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடியின் தேர்தல் விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? 30 நொடி டிவி விளம்பரத்திற்கும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்கும் லட்சக்கணக்கில் செலவாகிறது. அந்த பணத்தை மோடிக்காக தருவது யார்? நிச்சயம் அது அவரது பாக்கெட்டில் இருந்து வரவில்லை. அவர் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா போன்ற கடன் வாங்கி வெளிநாடு தப்பிய தொழிலதிபர்களுக்கு கொடுத்துள்ளார். கடந்த 2014ல் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக பொய் சொல்லிவிட்டார். விவசாயிகளை அழித்துவிட்டார். பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார். அவரைப் போல் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என நான் கூறவில்லை. நாங்கள் கூறுவது ஏழை குடும்பத்திற்கு ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்குவோம் என்பதே. இதற்கான நியாய் திட்டம் பற்றி பேசியதும் அதற்கான நிதி எங்கிருந்து வரும் என மோடி கேள்வி கேட்கிறார். அந்த பணம் நிச்சயம் நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்படாது. வருமான வரி உயர்த்தப்படாது. அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நிரவ் மோடி போன்றவர்களிடமிருந்து அந்த பணம் உங்களின் பாக்கெட்டுக்கு வரும்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், 22 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பஞ்சாயத்து அளவில் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விவசாயிகள் இரவு பகலாக உழைக்கிறார்கள். ஆனால் அதற்கான பலனை வேறொருவர் அனுபவிக்கிறார். இரண்டு விதமான இந்தியாவை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஒன்று, அனில் அம்பானி போன்றவர்களுக்கானது, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அது கிடைத்துவிடும். மற்றொன்று சாமானியனுக்கானது. எதுவுமே கிடைக்காது. பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கினால், விவசாய கடன்களுக்கும் வழங்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத விவசாயியை சிறையில் தள்ளினால், பணக்காரனையும் சிறைக்கு அனுப்ப வேண்டும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 10 நாளில் நாங்கள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தோம். நல்ல நாள் வரும் வரும் என்றார்கள், ஆனால் இந்த 5 ஆண்டில் காவலாளி திருடனாகி விட்டான். 5 ஆண்டுக்கு பின் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஆம் ஆத்மிக்கான கதவு இன்னும் திறந்திருக்கிறது:டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே பல கட்டங்களாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதற்கு காரணம், டெல்லி மட்டுமின்றி கோவா, அரியானா, பஞ்சாப், சண்டிகரிலும் சீட்களை ஆம் ஆத்மி கேட்பதாக காங்கிரஸ் கூறியது. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முதல் முறையாக டிவிட்டரில் நேற்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘‘டெல்லியில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி இடையேயான கூட்டணி, பாஜவை தோற்கடிக்கவே. இதற்காக டெல்லியில் 4 இடங்களை ஆம் ஆத்மிக்கு தர தயாராக இருக்கிறோம். ஆனால், கெஜ்ரிவால்  அடிக்கடி மாறுகிறார்’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால், ‘‘நான் என்ன மாறிவிட்டேன்? இன்னும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. கூட்டணியை நீங்கள் விரும்பவில்லை என்பதுடன், உங்கள் கருத்து வேதனை தருகிறது. பாஜவுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தவறி, பாஜவுக்கு துணை புரிகிறீர்கள்’’ என்று கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.