நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசாமல் பாகிஸ்தான் மீது நடந்த தாக்குதலை பேசிப்பேசி திசை திருப்பி வருகிறார்: பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

0 7

சிக்கமகளூரு: நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து பேசாமல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பேசியே மக்களை திசை திருப்பி வருகிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் விஜயபுராவில் உடுப்பி-சிக்கமகளூரு தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, சித்தராமையா, தினேஷ்குண்டுராவ் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தினேஷ்குண்டுராவ் பேசியதாவது:நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பலவிதமான பிரச்னைகள் உள்ளது. இவைகளை குறித்து பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வாய் திறந்து பேசாமல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மட்டும் பேசி மக்களை திசை திருப்பி வருகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கவும் அவர்களால் முடியவில்லை. இதுபோன்றவர்கள் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பார்கள்? இவ்வாறு அவர் பேசினார்.நிம்மதியை கெடுக்கும் மோடிகூட்டத்தில் மஜத தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேசியதாவது: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.  எனக்கு 86 வயது கடந்தும் மக்கள் என்னை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிம்மதியை கெடுத்து வருகிறார். இவர்களின் அலட்சியமான ஆட்சியால் நாட்டில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. நான் விவசாயிகளுக்கு துணையாக நின்று வருகிறேன். வருமான வரி துறையை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகின்றார். மோடி, தான் செய்த ஊழலை மறைக்கவே தேவையில்லாத கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு தேர்தலில் பாடம் கற்று கொடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.