ஜாக்கிரதை, பின்விளைவு படு பயங்கரமா இருக்கும்!: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

0 3

நியூயார்க் நகரில் நடந்த பேஷன் ஷோவில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த ஆடை, சிகை அலங்காரத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இணைத்து பாஜ இளைஞரணியின் ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா கடந்த 10ம் தேதி பேஸ்புக்கில் மீம்ஸ் வெளியிட்டார். இது பற்றி திரிணாமுல் தலைவர் மூத்த விபாஸ் ஹஜ்ரா அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரியங்கா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். ஹவுரா மாவட்ட உள்ளூர் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தனது கைது நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பிரியங்கா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர், ‘மன்னிப்பு கேட்டால் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படும்’ என்று முதலில் கூறினர். பின்னர், நிபந்தனையற்ற ஜாமீன் வழங்குவதாகவும், விடுப்பின் போது பிரியங்கா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் அளிக்கவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், பிரியங்காவை கைது செய்த தாஸ்நகர் காவல் அதிகாரிகள் அலிபூர் சிறையில் இருந்து அவரை விடுவிக்காததால் அவரது சகோதரர் ரஜிப் சர்மா நேற்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அமர்விடம், பிரியங்கா தரப்பு வழக்கறிஞர் என்.கே. கவுல் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் பிரியங்கா 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்’ என விளக்கினார். அப்போது மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரியங்கா குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைக்க தாமதமானதால், அவர் மறுநாள் காலை 9.40 மணிக்கு விடுவிக்கப்பட்டார்’ என தெரிவித்தார்.அப்போது நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தாமதித்தது ஏன்? நாங்கள் உத்தரவிடும் போது நீங்களும் இருந்தீர்கள் தானே?’’ என்று மேற்கு வங்க அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மேலும், ஒரு மீம்ஸ் வெளியிட்டதற்காகவா ஒருவரை கைது செய்வார்கள்? பிரியங்கா சர்மா கைது நடவடிக்கையே மாநில அரசின் தன்னிச்சையான முடிவு. இதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தாமதித்த மாநில அரசுக்கு ஏன் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கக் கூடாது. அவர் உடனடியாக விடுவிக்கப்படா விட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,’’ என்று எச்சரித்தனர். மேலும் பிரியங்கா விடுவிக்கப்பட்டரா என்பதை உடனடியாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த உத்தரவிட்டனர். அப்போது, பிரியங்கா தரப்பு வழக்கறிஞர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் ஏன் மாநில அரசின் தன்னிச்சையான முடிவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த விசாரணையை விடுமுறைக் காலம் முடிந்த பிறகு நடத்துவதாக கூறி, வழக்கை ஜூலை மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.மன்னிப்பு கேட்க மாட்டேன்’ஜாமீனில் வெளியே வந்ததும் கொல்கத்தாவில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா சர்மா, மம்தா பானர்ஜியிடம் நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. சிறையில் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதிகாரிகள் என்னை ஒரு கிரிமினல் போல் சிறைக்குள் தள்ளினார்கள். நான் ஒன்றும் குற்றவாளி அல்ல; என்னை தள்ளாதீர்கள் என்று கூறினேன். மிக கொடூரமாகவும் அநாகரீகமான முறையிலும் நடந்து கொண்டார்கள். சிறையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால், நானும் எனது குடும்பத்தினரும் சொல்ல முடியாத வேதனையை அடைந்தோம்,’’ எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.