குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி வரலாறு கறை படிந்தது: மாயாவதி காட்டம்

0 3

மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் முதல்வராக இருந்த காலத்தை விட நான் அதிக ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்துள்ளேன். என் மீது எந்த கறையும் கிடையாது’ என்று கூறினார். இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியதாவது: நான் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது எந்த கறையும் கிடையாது. நான் முதல்வராக இருந்ததை காட்டிலும் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக அதிக ஆண்டுகள் இருந்துள்ளார். ஆனால், முதல்வராக இருந்த அவரின் வரலாறு கறை படிந்தது. அந்த கறை அவருக்கு மட்டுமல்ல; பாஜ.விற்கும் சேர்த்துதான். அந்த கறை நாட்டின் வகுப்புவாத வரலாற்றின் மீதான சுமையாகும். பகுஜன் சமாஜ் கட்சி அதன் தலைவரின் சொந்த சொத்து என்று கூறியதன் மூலமாக, நாகரீகத்தின் அனைத்து எல்லையையும் தாண்டி விட்டார். யார் பினாமி சொத்தை வைத்திருக்கிறார்கள், ஊழலோடு பாஜ.வுடனான தொடர்பு என்ன என்பது பற்றி ஒட்டு மொத்த நாட்டுக்கே நன்கு தெரியும். பிரதமர் மோடி எப்படி ஆவணங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்டவரோ. அதேபோல் தான் காகிதங்களில் மட்டும் நேர்மையானவராக இருக்கிறார்.குஜராத் முதல்வராக இருந்தபோதும் பிரதமரான பின்னரும் அவரது பதவி காலம் முழுவதும் அராஜகம், கலவரம், பதற்றம் மற்றும் வெறுப்பு செயல்கள் தான் நிறைந்துள்ளது, அரசு பொறுப்பை தக்க வைப்பதில் அவர் தோல்வியடைந்து விட்டார். அவர் அதற்கு தகுதியற்றவர். இந்திய கலாசாரம் மற்றும் அரசியலமைப்பை கடைப்பிடிக்க தவறிவிட்டார். பிரதமராக இருப்பதற்கு அவர் தகுதியற்றவர். ரூபாய் நோட்டுக்கள் மீதான தடையானது மிகப்பெரிய ஊழலாகும். இதுவும் விசாரணை நடத்தப்படவேண்டிய ஒரு பிரச்னையாகும். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வர முடியாத பாஜவின் அரசியலை இந்த நாடு நன்கு அறியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.